/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
மகன் ஆசையை நிறைவேற்றிய தாய்; மின்சார பஸ் ஓட்டும் முதல் பெண் டிரைவர்
/
மகன் ஆசையை நிறைவேற்றிய தாய்; மின்சார பஸ் ஓட்டும் முதல் பெண் டிரைவர்
மகன் ஆசையை நிறைவேற்றிய தாய்; மின்சார பஸ் ஓட்டும் முதல் பெண் டிரைவர்
மகன் ஆசையை நிறைவேற்றிய தாய்; மின்சார பஸ் ஓட்டும் முதல் பெண் டிரைவர்
ADDED : மே 18, 2025 08:44 PM

பொதுவாக பிள்ளைகள் மீது அதீத அன்பு வைத்திருக்கும் பெற்றோர், பிள்ளைகள் ஏதாவது ஆசைப்பட்டால் அதை எப்படியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்று நினைப்பர். மகன் ஆசைப்பட்டார் என்பதற்காக ஒரு பெண் பஸ் டிரைவர் ஆகி விட்டார்.
துமகூரின் பாவகடாவை சேர்ந்தவர் துக்கம்மா, 34. இவருக்கு திருமணம் முடிந்து கணவர், 10 வயதில் மகன் உள்ளனர். தற்போது பெங்களூரு ஜாலஹள்ளியில் வசிக்கின்றனர்.
சிறு வயதில் இருந்தே துக்கம்மாவின் மகனுக்கு பஸ்சில் பயணம் செய்வது பிடிக்கும். ஒரு முறை துக்கம்மா மகனிடம் உனக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட போது, 'அம்மா நீங்கள் பஸ் ஓட்ட வேண்டும். அதை பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது' என்று கூறி இருக்கிறார். மகனின் ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் களம் இறங்கி இருக்கிறார் துக்கம்மா.
முதலில் இலகுரக வாகனங்களை ஓட்ட பயிற்சி எடுத்தார். கடந்த 2019ம் ஆண்டு நிர்பயா திட்டத்தின் கீழ் பி.எம்.டி.சி., மின்சார பஸ்சை ஓட்ட இலவச பயிற்சி எடுத்து கனரக வாகனம் ஓட்ட உரிமமும் பெற்றார்.
2022ம் ஆண்டு ராம்நகர் மாகடி அருகே வட்டரஹள்ளியில் உள்ள பி.எம்.டி.சி., மையத்தில் நன்கு பயிற்சி பெற்று பஸ் ஓட்டவும் கைதேர்ந்தார். 2023ம் ஆண்டு முதல் எலஹங்காவில் இருந்து தொட்டபல்லாபூர் வரை செல்லும் பி.எம்.டி.சி., மின்சார பஸ்சை ஓட்டுகிறார்.
இதுகுறித்து துக்கம்மா கூறுகையில், ''பி.எம்.டி.சி., பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்ததும் பனசங்கரி டிப்போவில் டீசல் பேருந்தை ஓட்டும் வாய்ப்பு கிடைத்தது. மின்சார பஸ் ஓட்ட பயிற்சி எடுத்துவிட்டு, டீசல் பஸ் ஓட்டிய போது சற்று கடினமாக இருந்தது. இதுபற்றி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றேன். மின்சார பஸ்கள் வந்ததும் டிரைவராக நியமித்தனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார பஸ் ஓட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
''சக ஊழியர்கள், அதிகாரிகளிடம் இருந்தும் எனக்கு ஆதரவு கிடைக்கிறது. பஸ் ஓட்டுவதன் மூலம் எனது மகனின் ஆசையை நிறைவேற்றி விட்டேன். பி.எம்.டி.சி.,யில் பெண் ஓட்டுநர்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் மாநிலத்தில் பஸ் ஓட்ட ஓட்டுநர் உரிமத்தை ஒரு சில பெண்களே வைத்து உள்ளனர். பெண்கள் தைரியமாக பஸ் ஓட்ட வர வேண்டும்,'' என்றார்.
- நமது நிருபர் -