தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ ஆட்டிசம் பாதித்த மகனுக்காக சிகிச்சை மையம் திறந்த தாய்

 ஆட்டிசம் பாதித்த மகனுக்காக சிகிச்சை மையம் திறந்த தாய்

 ஆட்டிசம் பாதித்த மகனுக்காக சிகிச்சை மையம் திறந்த தாய்


ADDED : செப் 20, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

'ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு, சிகிச்சை அளிக்க, 17 ஆண்டுகளாக அலைபாய்ந்த தாய், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிகிச்சை மையம் துவங்கியுள்ளார். இந்த மையம் நுாற்றுக்கணக்கானோருக்கு, மறு வாழ்வு அளிக்கிறது.

பெங்களூரின், இந்திரா நகரில் வசிப்பவர் பேலா ஜோஷி. இவரது மகனுக்கு ஒரு வயதாகும் போது, மகனுக்கு ஆட்டிசம் நோய் கண்டுபிடிக்கப்பட்டது. ஆட்டிசம் நோய் இருந்தாலும், மகன் அறிவாளியாக இருப்பதை கண்ட பேலா ஜோஷி, மகனுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி தர விரும்பினார்.

கடந்த 17 ஆண்டுகளாக சிகிச்சைக்காக, அலையாய் அலைந்தார். ஒவ்வொரு சிகிச்சை மையமாக ஏறி இறங்கினார். ஆனால் பலன் இல்லை. அதன் பின் பிரபலமான சிகிச்சை மையத்தில், தன் மகனை சேர்த்தார். அந்த மையம் கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தும்படி, நெருக்கடி கொடுத்தது. அதையடுத்து, அவரது மகனை அந்த சிகிச்சை மையத்தில் இருந்து வெளியேற்றினர்.

இதனால் மனம் வருந்திய பேலாவும், அவரது கணவர் ஜோஷியும், சொந்தமாக ஆட்டிசம் சிகிச்சை மையம் திறக்க முடிவு செய்தனர். அதன்படி, 11 ஆண்டுகளுக்கு முன், இந்திரா நகரில், 'கலர்ஸ் சென்டர் பார் லர்னிங்' என்ற, சிகிச்சை மையம் திறந்தனர்.

அன்று முதல் இம்மையம், நுாற்றுக்கணக்கான ஆட்டிசம் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது. ஆட்டிசம் பாதித்த சிறார்களை பராமரிப்பதில், மாநிலத்துக்கு முன் மாதிரியாக உள்ளது.

இவர்களின், கலர்ஸ் சென்டர் பார் லர்னிங் மையத்தில், சிகிச்சை மட்டுமின்றி சிறார்களுக்கு தேவையான அன்பு, கவுரவம் கிடைக்கிறது. அவர்கள் சுதந்தரமாக வளர வசதி செய்யப்படுகிறது.

நான்கு சுவர்களுக்கு நடுவே சிகிச்சை அளிப்பதில்லை. பதிலாக உணவு, விளையாட்டு, ஓவியக்கலை, இசை மூலமாக அவர்களின் நோய்க்கு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறார்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுப்பதில்லை. அவர்கள் ஒரு கலையை முழுதாக கற்ற பின்னரே, அடுத்த கட்டத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது.

கலர்ஸ் சென்டரில், பெற்றோர் சுதந்திரமாக நடமாடலாம். வெளியே காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. உள்ளே வந்து சிறார்களுக்கு வகுப்புகள் நடப்பதை, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை, நேரில் காணலாம்.

இந்த மையத்தில் நான்கு வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு மட்டுமின்றி, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும், சிகிச்சை மற்றும் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறார்களை மியூசியம், ஷாப்பிங் மால், பூங்காக்களுக்கு அழைத்து சென்று, மற்றவர்களுடன் பழக செய்து, தன்னம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. ஆட்டிசம் பாதித்தவர்களை, எந்த களங்கமும் இல்லாமல், சமூதாயத்தில் ஏற்க வேண்டும் என்பது, பேலா ஜோஷியின் கனவாகும். தன் மகனுக்காக இவர் துவங்கிய மையம், இன்று நுாற்றுக்கணக்கான ஆட்டிசம் நோயாளிகளுக்கு, மறு வாழ்வு அளிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us