ADDED : ஜூலை 19, 2026 11:22 PM

- நமது நிருபர் -:
பேர பிள்ளைகளுடன் நேரத்தை கழிக்கும் வயதில், பல்வேறு வகையான விதை பயிர்களை விற்று, அதன் குணாதிசயங்களை விவரித்து வருகிறார், 70 வயது பத்மம்மா.
மாண்டியா மாவட்டம், பிரியபட்டணா தாலுகாவின் கனகலுவை சேர்ந்தவர் பத்மம்மா, 70. இவர், சிறு வயதில் இருந்தே நடவு விதைகளை சேகரித்து வருகிறார்.
மைசூரு நஞ்சராஜ பகதுார் திருமணத்தில் நடந்த விதைகள் கண்காட்சியில், கர்நாடகாவின் பல பகுதிகளில் வளரும் பல்வேறு வகையான சோளத்தின் விதைகளை விற்பனைக்கு வைத்தார். மஞ்சள், சிவப்பு, ஊதா, பழுப்பு என நான்கு அல்லது ஐந்து வண்ணங்களில் ஜொலிக்கும் சோளங்களை சேகரித்து அந்த கண்காட்சியில் வைத்திருந்தார்.
அனைத்து சோள விதைகள் குறித்தும், தன் நுனியில் வைத்துள்ளார்.
ஒவ்வொரு விதைக்கு பின்னாலும் கதை, போராட்டம், பாதுகாப்பு பயணங்களை விளக்குகிறார். அவரின் வார்த்தைகளில் மறைந்திருந்த இயற்கை, இயற்கை விவசாயம், உயிரியல் அறிவு நம்மை பிரமிக்க வைக்கும்.
மக்காச்சோளம் காற்றினால் மகரந்த சேர்க்கை நடைபெறும் ஒரு பயிராகும். ஒரு மக்காச்சோள செடியின் மகரந்தம், காற்றின் வழியாக மற்றொரு செடியின் பூவை அடையும் போது, அயல் மகரந்த சேர்க்கை நிகழ்கிறது.
இதன் விளைவாக, புதிய பண்புகளை கொண்ட விதைகள் உருவாகின்றன. இதனால் தான், ஒரே கதிரில் வெவ்வேறு வண்ண மணிகள் தோன்றுகின்றன. இதுவே அதன் அறிவியல் பகுப்பாய்வாகும்.
பத்மம்மாவை பொறுத்த வரை, இந்த பன்முகத்தன்மை, ஒரு அறிவியல் உண்மை மட்டுமல்ல. அது, இயற்கை படைப்பாற்றலின் சின்னமாகும்.
பல ஆண்டுகளாக தாவர விதைகளை பாதுகாத்து, அதை கண்காட்சிக்கு கொண்டு வந்து, விவசாயிகளுக்கும், ஆர்வம் உள்ளவர்களுக்கும் வினியோகிப்பது பெருமை அளிக்கிறது.
விதை கண்காட்சிக்கு வருவோர், பத்மம்மாவிடம் விதைகளை வாங்கி செல்வது மட்டுமின்றி, விதைகளுக்கு பின்னால், அவற்றின் ஆளுமைகளும், கதைகளையும் நினைவில் தாங்கியபடி செல்கின்றனர்.
