/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
கார் ரேசில் அசத்தும் பிரகதி கவுடா
/
கார் ரேசில் அசத்தும் பிரகதி கவுடா
ADDED : ஜன 12, 2026 06:44 AM

: தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கார் ரேசில் முத்திரை பதித்து, இந்தியாவின் சிறந்த பெண் கார் ரேசர் என்ற பெயரை பெற்றுள்ளார் பெங்களூரை சேர்ந்த இளம் பெண்.
பெங்களூரை சேர்ந்தவர் பிரகதி கவுடா, 27. இரு சக்கர வாகனம் ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்ட இவர், 13 வயது இருக்கும் போதே இரு சக்கர வாகனத்தை ஓட்டினார். 18 வயதில் அனுபவம் வாய்ந்தவர்கள் போன்று அசாதாரணமாக கார் ஓட்டினார். சாகசம், ஆட்டோமொபைல்கள் மீதான ஈர்ப்பு, ஆபத்து என்று தெரிந்தும் தைரியமாக போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
கடந்த 2022ல் ஜூனியர் இந்திய தேசிய பேரணி சாம்பியன்; பிரான்சில் 2024ல் நடந்த ராலி டெஸ் வல்லீஸ் போட்டியில், மணிக்கு 102.5 கி.மீ., பயணித்து, மூன்றாவது இடத்தை பிடித்து, நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
இது குறித்து பிரகதி கவுடா கூறியதாவது:
எனக்கு உலக ரேஸ் கார் ஓட்டுநர்களான செபாஸ்டியன் ஓஜியர், மைக்கேல் மவுடன் ஆகியோர் தான் ரோல் மாடல். அவர்களை போன்று, இந்திய ரேசரில், சேத்தன் சிவ்ராமின் திறமை எனக்கு பிடிக்கும்.
மோட்டார் துறையில் உள்ள என் ஆர்வத்துக்கு பெற்றோரும், சகோதரரும் முழு ஆதரவு அளித்தனர். இந்த விளையாட்டு, உடல் ஆரோக்கியம், பொருளாதாரம், குறிப்பாக பெண்கள் பங்கேற்பது அரிது. ஆனாலும் என் வீட்டில் ஊக்கம் அளித்தனர்.
போட்டி துவங்கியதும், நான் வெல்கிறேனா அல்லது எங்காவது மோதுகிறேனா என்பது எனக்கே தெரியாது. இது என் பெற்றோருக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும், அவர்களை சமாதானப்படுத்தி வருகிறேன்.
போட்டியில் ஆண் ரேசர்களின் கார் விபத்தில் சிக்கினால் எதுவும் சொல்லாதவர்கள், பெண்களின் கார் மோதினால் மட்டும் 'அவள் பெண்' என்று கூறுவது வேதனை அளிக்கிறது. ஆனால் என் வளர்ச்சியில் முழு கவனம் செலுத்தி வருகிறேன்.
இப்போட்டி உடல் ரீதியான விளையாட்டு போன்று, மனரீதியான விளையாட்டாகும். புத்தியை கூர்மையாக வைத்திருக்க, மனநல பயிற்சியாளருடன் பயிற்சி பெற்று வருகிறேன். இதன் மூலம் போட்டியில் எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாது. உடனடியாக எதிர் வினையாற்ற இது உதவும்.
துல்லியம், வேகத்தால், தேசிய அளவில் இருந்து சர்வதேச கார் ரேசில் பங்கேற்க முடிந்தது.
சர்வதேச கார் ரேஸ் தான் என் இலக்கு. இந்திய ரேசிங், எனக்கு படிக்கல்லாக இருந்தது. இதை சாத்தியமாக்கியவர்களுக்கு நன்றி.
இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு கிடைக்கும் 'ஸ்பான்சர்கள்' போன்று, மற்ற போட்டிகளுக்கு கிடைப்பதில்லை. குறிப்பாக, மோட்டார் விளையாட்டு என்றால், பெரும்பாலான மக்களுக்கு தெரியாது.
மோட்டார் விளையாட்டில் பங்கேற்பவர்களின் வயது 21 முதல் 29 வயது வரை இருக்கும்.
இவர்களின் இந்த தொழில்முறை வாழ்க்கை 7 அல்லது 8 ஆண்டுகள் நீடிக்கும். நான் தாமதமாக இந்த போட்டியில் நுழைந்தாலும், மிக வேகமாக முன்னேறி வந்துள்ளேன். மோட்டார் ஸ்போர்ட்சில் பங்கேற்க விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டவும், பயிற்சி அளிக்கவும் தயாராக உள்ளேன். இந்தியாவில் இந்த விளையாட்டுக்கான அகாடமியை துவக்க திட்டமிட்டு உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

