/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
அவமானத்தை துரத்தி 'முனைவர்' பட்டம் வென்ற சபிதா
/
அவமானத்தை துரத்தி 'முனைவர்' பட்டம் வென்ற சபிதா
ADDED : ஏப் 21, 2025 05:18 AM

இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகியும், நாட்டில் சில பகுதிகளில் இன்னும் தீண்டாமை உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பது; தண்டனை கொடுத்து ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது போன்றவை நடந்து வருகிறது. தீண்டாமையில் இருந்து தாழ்த்தப்பட்டவர்களை பாதுகாக்கும் ஒரே ஆயுதமாக இன்று கல்வி தான் உள்ளது. கல்வி என்ற ஆயுதத்தை பயன்படுத்தி முனைவர் பட்டம் வென்று அசத்தி உள்ளார் பழங்குடியின சமூக பெண்.
உடுப்பி தாலுகா குன்ட்மி கிராமத்தை சேர்ந்தவர் சபிதா, 38. கோரகா பழங்குடியின சமூகத்தில் பிறந்தவர். உடுப்பியில் தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியையாக இருக்கும் சபிதா, முனைவர் பட்டம் பெற்று அசத்தி உள்ளார்.
தனது வாழ்க்கை பயணம் குறித்து மனம் திறந்து அவர் கூறியதாவது:
ஸ்கேல் அடி
கர்நாடகாவின் தட்சிண கன்னடா, உடுப்பி; கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் கோரகா பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். உத்தர கன்னடா, ஷிவமொக்கா, குடகில் கணிசமாக உள்ளனர். 1950ல் கர்நாடகாவில் 50,000 க்கும் மேற்பட்ட கோரகா சமூக மக்கள் வசித்தனர். தற்போது வெறும் 15,000 பேர் மட்டும் உள்ளனர்.
கோரகா சமூகத்தில் பிறந்ததால், எனது துவக்க பள்ளி காலத்தில் நிறைய அவமானங்களை சந்தித்து உள்ளேன். நான், ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, எனக்கு பாடம் எடுத்த ஆசிரியை ஒருவருக்கு மலர்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு மாலையை கொடுத்தேன். அப்போது என் கை அவர் மீது பட்டுவிட்டது.
கோபத்தில் மலர் மாலையை துாக்கி வீசியதுடன், என்னையும் ஸ்கேலால் அடித்தார். இனி பள்ளிக்கு செல்ல கூடாது என்று முடிவு எடுத்து வீட்டில் இருந்தேன். பின், கல்வி மூலம் மட்டும் தான் அவமானங்களை வெல்ல முடியும் என்று நினைத்து மீண்டும் படிப்பை தொடர்ந்தேன்.
கல்வி ஆயுதம்
எனது தாய் கடந்த 2009ல் விபத்தில் இறந்த பிறகு, எங்கள் சமூகத்தின் சிலரின் உதவியுடன், மங்களூரில் கல்லுாரி படித்தேன். கல்லுாரி முடித்ததும் வரலாறு துறையில் முனைவர் பட்டமும் பெற்றேன். உடுப்பி மாவட்டத்தில் பழங்குடியின சமூகத்தில் இருந்து முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் நான் தான். பின், உடுப்பியில் உள்ள கல்லுாரியில் உதவி பேராசிரியர் வேலைக்கு சேர்ந்தேன்.
எனக்கு கடந்த 2015ல் திருமணம் நடந்தது. கணவர் பெயர் தினகர். போலியோ பாதிப்பால் அவருக்கு ஒரு கால் இல்லை. எங்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார். திருமணம் முடிந்த மறுநாள் மறுவீட்டிற்கு சென்ற போது, எங்கள் வீட்டில் உணவு சமைக்க வேறு ஜாதியை சேர்ந்த ஒரு பெண்ணை அழைத்தோம்.
உணவு சமைக்கும் போது உப்பு சரியாக உள்ளதா என்று பார்க்க மாட்டேன்; உங்கள் வீட்டில் தரும் தண்ணீரை பயன்படுத்த மாட்டேன் என்று கூறினார். அவர் கூறியதை நாங்கள் கேட்காததால், சமையல் செய்யாமல் சென்று விட்டார். இது மனதிற்கு வேதனையாக இருந்தது.
கல்வி தான் நம்மை பாதுகாக்கும் ஆயுதம் என்று, எனது சமூக மாணவ -- மாணவியரிடம் கூறுகிறேன். யாருக்கு உதவி தேவைப்பட்டாலும் என்னால் முடிந்ததை செய்கிறேன். ஜாதி, மத பாகுபாடுகளை களைந்து அனைவரும் சமமாக பார்க்கப்பட வேண்டும் என்பது எனது ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

