/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
மதுவை ஒழிக்க தனி ஆளாக போராடும் மூதாட்டி சங்கம்மா
/
மதுவை ஒழிக்க தனி ஆளாக போராடும் மூதாட்டி சங்கம்மா
ADDED : ஏப் 14, 2025 05:39 AM

'நாட்டிற்கும், வீட்டிற்கும், உயிருக்கும் கேடு' என்று மதுபான பாட்டில்களில் லேபிள் ஒட்டி இருந்தாலும், குடிமகன்கள் மது குடிப்பதை நிறுத்துவதில்லை.
மதுவால் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம். குற்ற சம்பவங்கள் நடப்பதற்கு மூல காரணமும் மது பழக்கம் தான். கர்நாடக தலைநகரான பெங்களூரில் ஏராளமான மதுபான கடைகள் உள்ளன. பெண்களுக்கு என்று தனி கடைகளும் உள்ளன.
இந்நிலையில், கர்நாடகாவின் வட மாவட்டங்களில் மதுவுக்கு எதிராக தினமும் போராட்டம் நடந்து வருகின்றன. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களில் மதுக்கடைக்கு எதிராக தனியாக ஒரு மூதாட்டி போராடி வருகிறார்.
கலபுரகியின் ஆலந்த் தாலுகா, நிம்பாலா கிராமத்தை சேர்ந்தவர் சங்கம்மா சனக்கா, 65. இவருக்கு 13 வயதிலேயே திருமணம் ஆனது. பிள்ளைகள் உள்ளனர். கடந்த 1992ல் சங்கம்மா கணவர் விபத்தில் இறந்து விட்டார்.
பின், அவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஜேட் மடத்தின் மடாதிபதி சாந்த லிங்கேஸ்வர சுவாமியின் அழைப்பை ஏற்று, மதுவை ஒழிக்க போராட்டங்களை தனி ஆளாக நின்று நடத்தி வருகிறார். இதற்காக அவர் சம்பாதித்த எதிர்ப்புகள் ஏராளம்.
ஆனாலும் தனது கொள்கையில் அவர் உறுதியுடன் செயல்படுகிறார். மது குடித்துவிட்டு குடும்பத்தினருடன் சண்டை போடும் ஆண்களை சந்தித்து அவர்களிடம் பேச்சு நடத்தி, மது பழக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு உதவி செய்கிறார்.
இந்த வயதிலும் சங்கம்மாவின் ஆர்வத்தை பார்த்து சில பெண்களும் அவருடன் கைகோர்த்து, மது ஒழிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மது பழக்கம் இல்லாத கிராமமாக நிம்பலாவை மாற்றுவதை எனது குறிக்கோள் என்றும் சங்கம்மா கூறி உள்ளார்.
--- நமது நிருபர் - -

