/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
தீண்டாமை வலியை கடந்து இசை ஓவியத்தில் அசத்தும் சரிதா
/
தீண்டாமை வலியை கடந்து இசை ஓவியத்தில் அசத்தும் சரிதா
தீண்டாமை வலியை கடந்து இசை ஓவியத்தில் அசத்தும் சரிதா
தீண்டாமை வலியை கடந்து இசை ஓவியத்தில் அசத்தும் சரிதா
ADDED : ஜூலை 14, 2025 05:50 AM

நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகியும், இன்றைய நவீன காலகட்டத்திலும் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஊரை விட்டும், கோவிலுக்கு வர கூடாது என்றும் தள்ளி வைக்கப்படுகின்றனர்.
கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களில் கூட தீண்டாமையால் பாதிக்கப்படுவோர் நிறைய பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் மைசூரை சேர்ந்த சரிதா. சிறு வயதில் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட இவர், பல தடைகளை கடந்து கர்நாடக, ஹிந்துஸ்தானி இசை கற்று உள்ளார்.
பெங்காலி மொழி
தனது வாழ்க்கை சக்கரம் குறித்து சரிதா கூறியதாவது:
என் தந்தை தாழ்த்தப்பட்ட சமூகத்தையும், தாய் உயர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்தனர். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கலப்பு திருமணம் செய்து கொண்டனர். சிறுவயதில் இருந்தே எனக்கு இசை மீது ஆர்வம் அதிகம் இருந்தது.
கர்நாடக இசையை கற்று கொள்ள விரும்பினேன். ஆனால் எனது தந்தை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், சிலர் என்னை புறக்கணித்தனர்; தீண்டாமை வலியை அனுபவித்தேன்.
ஆனாலும் எப்படியாவது இசை கற்று கொள்ள வேண்டும் என்ற எனது உறுதி மட்டும் போகவில்லை. சிலரின் ஊக்கம், உதவியால் கர்நாடக இசை கற்று பின், ஹிந்துஸ்தானி இசையும் கற்று கொண்டேன். கல்லுாரியில் படிக்கும் காலத்தில் இசை மீது ஆர்வம் ஏற்பட்டது. மைசூரில் உள்ள சாமராஜேந்திரா கலை கல்லுாரியில் படித்த பின்னர். மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தில் ஓவிய படிப்பு முடித்தேன். அங்கு பெங்காலி, அசாமி மொழிகளை கற்று கொண்டேன்.
விரிவுரையாளர்
அந்த இரு மொழிகள் மூலமும், ஓவிய துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் அறிமுகம் கிடைத்தது. நிறைய ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன். இசையிலும் நிறைய கவனம் செலுத்தினேன். பெண் கலைஞர்களை சிலரை முன்னிலைப்படுத்தி, 'சப்த சுயம் அர்த்தான்' என்ற பெயரில் ஆவணப்படமும் எடுத்து உள்ளேன்.
கர்நாடகாவின் கலை பாரம்பரியத்தில் மைசூரு பாரம்பரிய கலைஞர்களின் பங்கு என்ற தலைப்பில், மைசூரு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்று இருக்கிறேன். ஹம்பி கன்னட பல்கலைக் கழகத்தில் ஓவிய துறையில் விருந்தினர் விரிவுரையாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளது.
தீண்டாமையில் ஒதுக்கப்படும் மாணவர்களுக்கு ஆறுதல் அளித்து ஊக்கம் கொடுப்பது ஆசிரியர்கள் தான். இதனால் அந்த பணி எனக்கு பிடிக்கும். நவீன உலகில் தீண்டாமையால் யாரையும் ஒதுக்கிவிட வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

