/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
எழுத, படிக்க கற்று கொடுக்கும் ஷீலா நஞ்சுண்டய்யா
/
எழுத, படிக்க கற்று கொடுக்கும் ஷீலா நஞ்சுண்டய்யா
ADDED : செப் 15, 2025 04:40 AM

இன்றைய நவீன காலகட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. எழுத, படிக்க தெரிந்தவர்களை கூட சைபர் கிரைம் வஞ்சகர்கள் எளிதில் ஏமாற்றி விடுகின்றனர். எழுத்து, படிப்பறிவு இல்லாதவர்கள், சைபர் கிரைம் செய்வோர் கையில் சிக்கினால் நிலைமை என்ன ஆகும்.
இந்த காலத்தில் கொஞ்சமாவது எழுத, படிக்க தெரிந்தால் தான் காலம் தள்ள முடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் கிராம பகுதிகளில் வசிக்கும் எழுத, படிக்க தெரியாதோருக்கு எழுத, படிக்க கற்று கொடுக்கும் வேலையை ஷீலா நஞ்சுண்டய்யா செய்கிறார்.
மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணா கிராமத்தை சேர்ந்த ஷீலா நஞ்சுண்டயா, பெண்களுக்கான உதவி மையத்தை நடத்துகிறார். வரதட்சணை கொடுமை, பாலியல் சுரண்டல், சொத்து பங்கீட்டில் அநீதியால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்ட உதவிகளை கிடைக்க செய்கிறார்.
கடந்த 2008 ம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான வழக்குகளை தீர்த்து வைத்து உள்ளார். பல காரணங்களுக்காக பிரிந்திருந்த தம்பதியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சேர்த்து வைத்ததில் முக்கிய பங்காற்றி உள்ளார்.
கடந்த 2002 ல் ஸ்ரீரங்கப்பட்டணா நகராட்சி தலைவியாகவும் பதவி வகித்தார். ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவின் பல கிராமங்களுக்கு சென்று பெண் சிசுக்கொலை, பெண்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
தனது தோழிகளுடன் கிராமம், கிராமமாக சென்று எழுத்து, படிப்பு அறிவு இல்லாத மக்களுக்கு இரண்டையும் சொல்லி கொடுக்கிறார்.
பெண்கள் சுயதொழில் கற்று கொள்ள பயிற்சி அளிப்பதுடன், அரசிடம் இருந்து பெண்கள், முதியோருக்கு கிடைக்கும் உதவி தொகையை பெற்று கொடுப்பதிலும் முக்கிய பங்கு ஆற்றுகிறார்.
- நமது நிருபர் -