ADDED : ஏப் 07, 2025 04:59 AM

கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, உலக மக்களை அச்சுறுத்தியது. அவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டது. கண்ணீரில் கை கழுவும்படி செய்தது. அதே நேரத்தில் வாழ்க்கை பாடத்தையும் கற்று கொடுத்தது என்பதில், மாற்று கருத்தே இல்லை. இந்த பாடம் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.
கடந்த 2020ல் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. மாதக்கணக்கில் ஊரடங்கு அமலில் இருந்தது. தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலையை பறிகொடுத்து அல்லல்பட்டனர். மறக்க முடியாத கஷ்டங்கள், சேதங்களை கொடுத்து சென்ற கொரோனா, பெண்கள் பலரும் தொழிலதிபர்களாக காரணமாகவும் இருந்தது. அதில் ஒருவர் தான், ஷ்ரேயா ஷெட்டி.
'ஒர்க் பிரம் ஹோம்'
தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவின், உஜிரேவின் பள்ளமஞ்சா கிராமத்தை சேர்ந்தவர் ஷ்ரேயா ஷெட்டி, 25. எம்.எஸ்.சி., பட்டதாரியான இவர், பெங்களூரில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனம் ஒன்றில் மென் பொறியாளராக பணியாற்றுகிறார். கொரோனாவை கட்டுப்படுத்த, மாநில அரசு ஊரடங்கு அமல்படுத்திய போது, ஐ.டி., நிறுவனங்கள் 'ஒர்க் பிரம் ஹோம்' நடைமுறையை கொண்டு வந்தது. அதே போன்று ஷ்ரேயாவும், வீட்டில் இருந்து பணியாற்ற துவங்கினார்.
வீட்டில் இருந்து பணியாற்றினாலும், தானும் தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. அதை நிறைவேற்ற உஜிரேவில் 20 லட்சம் ரூபாய் செலவில், 'கிளவுட் காஸ்வெல் கபே' என்ற பெயரில் கபே துவக்கினார். தன் சொந்த கற்பனையில் கபேவில் அற்புதமாக உள் கட்டமைப்பு வடிவமைத்துள்ளார்.
பெங்களூரில் இருப்பதை போன்றே, உஜிரேவில் உருவாக்கியுள்ளார். இங்கு பலவிதமான பழ ரசங்கள், லஸ்சி, காபி, டீ, தின்பண்டங்களை விற்பனை செய்கிறார். குடும்பத்தின் ஒத்துழைப்புடன் துவங்கிய கபே, இன்று வெற்றிகரமாக செயல்படுகிறது.
லட்சியம்
பெண் தொழிலதிபராக, மேலும் சாதனை செய்ய வேண்டும் என்பது ஷ்ரேயாவின் லட்சியமாகும். கபேவில் ஊழியர்களை நியமித்திருந்தாலும், வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் எடுப்பது, தேவையானதை சப்ளை செய்வதிலும் ஈடுபடுகிறார்.
வாடிக்கையாளர்களாக பார்க்காமல், நண்பர்களை போன்று சிரித்த முகத்துடன் பேசுகிறார். இது மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அவ்வப்போது தங்கள் குடும்பங்கள், நண்பர்களுடன் கபேவுக்கு வருகின்றனர்.
ஷ்ரேயா போன்ற இளம் பெண்கள், மற்றவருக்கு எடுத்துக்காட்டு. நிறுவன பணியை மட்டும் கவனித்தால் போதும் என, நினைக்காமல் தானும் தொழிலதிபராக வளர வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறார்; படிப்படியாக முன்னேறுகிறார். பல்வேறு இடங்களில் புதிதாக 'கபே' துவக்கி, பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.
- நமது நிருபர் -

