/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
கண்களை கட்டிக்கொண்டு தேர்வு எழுதிய மாணவி
/
கண்களை கட்டிக்கொண்டு தேர்வு எழுதிய மாணவி
ADDED : டிச 15, 2025 05:00 AM

- நமது நிருபர் -
ன்றைய சிறார்கள் மிகவும் திறமைசாலிகள். ஒவ்வொருவரும் தனக்குள்ளே தனித்திறமையை ஒளித்து வைத்துள்ளனர். வாய்ப்பு கிடைக்கும் போது, அதை வெளிப்படுத்துகின்றனர். இவர்களில் மாணவி ஹிமபிந்துவும் ஒருவர்.
பல்லாரி நகரின், குரவள்ளி திம்மப்பா மெமோரியல் ஆங்கில பள்ளியில் எட்டாம் வகுப்பு படிப்பவர் ஹிமபிந்து, 14. இவர் காந்தாரி வித்தையில் கை தேர்ந்தவர். கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு, அறிவியல் தேர்வு எழுதி அசத்தியுள்ளார். இவரது சாதனையை ஆசிரியர்கள், பொது மக்கள் பாராட்டியுள்ளனர். குறிப்பாக இடது கையால் தேர்வு எழுதியுள்ளார்.
கண்களை கட்டிக்கொண்டே, அவரது முன்னால் இருப்பது யாருடைய போட்டோ என்பதை கண்ணிமைக்கும் நேரத்தில் கூறும் திறன் கொண்டவர்.
பிரதமர் நரேந்திர மோடி, ஆஞ்சநேயர் சுவாமி, கனகதாசர் உட்பட, கடவுள்கள், தேசத்தலைவர்களின் போட்டோக்களை அடையாளம் காட்டியுள்ளார். கண்களை மூடிக்கொண்டு, மொபைல் போனில் இருக்கும் எழுத்துக்களை, சட்டென கூறுவார். கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதிலும், மாணவி கை தேர்ந்தவர். சிக்கமகளூரில் வசிக்கும் சதீஷ் பத்மநாபா என்பவரிடம், ஆன்லைன் வழியாக மாணவி ஹிமபிந்து, காந்தாரி வித்தையை கற்றுக்கொண்டார். இதற்காக சதீஷ் பத்மநாபா, எந்த கட்டணமும் பெறவில்லை.
இவரிடம், 20 நாட்கள் பயிற்சி பெற்றுள்ளார். ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுக்கிறார். இந்த வித்தை சிறார்களின் அறிவுக்கூர்மை, தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
வெறும் 14 வயதில், காந்தாரி வித்தையை கரைத்து குடித்துள்ள மாணவி, அடுத்து வரும் எட்டாம் வகுப்பின் அனைத்து தேர்வுகளையும், கண்களை கட்டிக்கொண்டே எழுத முடிவு செய்துள்ளார். இவருக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் ஊக்கமளிக்கின்றனர். எட்டாம் வகுப்பு என்பதால், கண்களை மூடிக்கொண்டு தேர்வு எழுத, பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்தது.
ஆனால் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி,யு.சி., போன்ற போர்டு தேர்வுகளை, கண்களை கட்டிக்கொண்டு எழுத அனுமதி இருக்காது.
இது குறித்து, மாணவி ஹிமபிந்து கூறியதாவது:
நான் சிறு வயதில் இருந்தே, கண்களை கட்டிக்கொண்டு, எழுதும் பயிற்சி பெற்றுள்ளேன். ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதும், இது போன்று தேர்வு எழுதினேன். தேர்வு எழுதுவதற்கு முன், ஒரு ரகசிய மந்திரத்தை உச்சரிப்பேன்.
அதை யாரிடமும் நான் கூறமாட்டேன். இது போன்று 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்று, விருதுகள் பெற்றுள்ளேன்.
குரு மூலமாகவே காந்தாரி வித்தையை, நான் கற்றுக்கொண்டேன். கண்களை கட்டினாலும், எனக்கு மூன்றாவது கண்ணின் வழியாக, அனைத்தும் தெரியும். இதற்காக எனக்கு பிராணாயாமம் ஒன்றை, குரு கற்றுக்கொடுத்துள்ளார். வரும் நாட்களில் இந்த கலையில் மேலும் பல சாதனைகள் செய்ய வேண்டும் என்பது, என் குறிக்கோளாகும். இவ்வாறு அவர் கூறினார்.

