/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
மாற்று திறனாளிகளுக்காக குரல் கொடுக்கும் தன்யா ரவி
/
மாற்று திறனாளிகளுக்காக குரல் கொடுக்கும் தன்யா ரவி
ADDED : மே 26, 2025 12:00 AM

பொதுவாக நல்ல உடல்வாகு கொண்டவர்களை விட, மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்று லட்சியம் இருக்கும். இதற்காக கடுமையாக முயற்சி செய்வர். விளையாட்டு துறையில் மாற்றுத் திறனாளிகள் சாதனைகள் ஏராளம்.
கண் தெரியாத மாற்றுத் திறனாளிகள் பேனா விற்று பிழைப்பு நடத்துவதை பார்த்து இருப்போம். எப்போதும், எதற்காகவும் யாரிடமும் கையேந்த கூடாது என்று நினைப்பர்.
ஆனால் சில நேரங்களில் உடல் ஊனத்தை வைத்து மற்றவர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாகும் போது மனம் உடைந்து போகின்றனர். இப்படிப்பட்டவர்கள் மத்தியில் மாற்றுத் திறனாளிகளுக்காக குரல் கொடுத்து வருகிறார் தன்யா ரவி. இவரும் மாற்றுத்திறனாளி.
கடந்த 1989ம் ஆண்டு தன்யா ரவி பிறந்த போது, தொடர்ந்து அழுது கொண்டே இருந்து உள்ளார். ஏன் அழுகிறார் என்று கூட பெற்றோருக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. பிறந்து சில மாதங்களுக்கு பின் தான், அவருக்கு அரிய மரபணு கோளாறான 'ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்பெக்டா' என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் பெரும்பாலான நாட்களில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். ஆனாலும் இரண்டு கால்களும் அவருக்கு முடங்கியது. பத்தாம் வகுப்பு வரை வீட்டில் இருந்தபடி கல்வி பயின்றார்.
இதையடுத்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது பயணத்தை துவங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார பராமரிப்பு, சமூக இடைவெளியில் உள்ள குறைகளை தீர்க்க ஆர்வம் காட்டினார். தனது நண்பர்களுடன் இணைந்து பெங்களூரில், 'ஆஸ்மான்' என்ற பெயரில் அரசு சாரா அறக்கட்டளை துவங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
கடந்த 2022 ல் டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்யா ரவி, சக்கர நாற்காலியில் நான் அமர்ந்து இருந்தாலும், இங்கு அமர்ந்தபடியே என்னால் அனைத்தையும் மாற்ற முடியும் என்று உறுதியாக கூறினார். மாற்றுத்திறனாளிகளுக்காக முக்கிய திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மரபணு கோளாறால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளார்.
- நமது நிருபர் -