ADDED : அக் 27, 2025 03:22 AM

வீட்டு வாசலில் போடும் வண்ண கோலங்கள், வீட்டின் அழகை அதிகரிக்கும்; துள்ளாத மனமும் துள்ளும். பண்டிகை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். வாசலை அழகாக்கும் கோலங்களை போடுவது தனிக் கலையாகும். சில பெண்களுக்கு கோலம் போட தெரிவதில்லை. சிலருக்கு மட்டுமே அது கைவந்த கலையாகும். இத்தகைய பெண்களில் வீணா மஞ்சுநாத் ஐதாளும் ஒருவர்.
ஹிந்து சம்பிரதாயத்தில் கோலங்களுக்கு தனி மகத்துவம் உள்ளது. கிராமங்கள் மட்டுமின்றி, நகர்ப்பகுதிகளிலும் கூட பெண்கள் தினமும் காலை, மாலையில் வாசலில் அழகான கோலங்கள் போட்டு, வீட்டை அழகாக்குவதை காணலாம். கோலங்களை விரும்பாத, ரசிக்காத பெண்களே இருக்க முடியாது.
கோலங்கள் போடுவதில், வீணா மஞ்சுநாத் ஐதாள் கை தேர்ந்த நிபுணர்.
இவரது கை வண்ணத்தில் அற்புதமான கலை கோலங்கள் உருவாகின்றன. இவற்றை பார்ப்பவர்கள் வியக்காமல் இருக்கவே முடியாது.
மஹாலட்சுமி, சிவன், பார்வதி, விநாயகர், கிராம தேவதைகள் உட்பட கடவுள் கோலங்கள், பிரதமர் மோடி, ராணி அப்பக்கா, சாலுமரத திம்மக்கா, விலங்குகள், பறவைகளின் உருவங்களை வீணாவின் கை வண்ணத்தில் காணலாம். இவர் தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்தவர். திருமணங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள் என, பல நிகழ்ச்சிகளில் இவரை கோலம் போட அழைக்கின்றனர். இரண்டு கைகளாலும் கோலம் போடுவது, இவரது தனிச்சிறப்பாகும்.
இது தொடர்பாக வீணா மஞ்சுநாத் கூறியதாவது:
கலை கோலங்கள் போடும் திறன் எனக்கு இருப்பது, கடவுள் அளித்த வரமாகும். பகல் நேரத்தில் குடும்பத்தை கவனிக்க வேண்டும். வீட்டு வேலைகள் இருக்கும்.
எனவே இரவு நேரத்தில் கோலம் போடுகிறேன். இந்த பழக்கம், எனக்கு பொறுமையை கற்றுக்கொடுத்துள்ளது.
சிறிதான வண்ண கோலம் போட, ஐந்து மணி நேரமாகும். ஒன்பது அடி கொண்ட பெரிய கோலம் போட பல மணி நேரம் தேவைப்படும். கோலம் முழுமையடையும் வரை, அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
அதற்கு அதிக பொறுமை வேண்டும். கடவுளின் ஆசி இருந்தால் மட்டுமே, இது சாத்தியமாகும்.
இதுவரை நுாற்றுக்கணக்கான கோலங்கள் போட்டுள்ளேன். என் கணவரும், பிள்ளைகளும் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். இதனால் என்னால் சாதிக்க முடிகிறது. திருமணங்கள், நிகழ்ச்சிகள், பண்டிகை நாட்களில் கோலங்கள் போட்டு தருகிறேன். கோலங்கள் போட மிகவும் பொறுமை வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

