/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
பருத்தி சேலைக்கு புத்துயிர் கொடுத்த பெண்
/
பருத்தி சேலைக்கு புத்துயிர் கொடுத்த பெண்
ADDED : மே 18, 2025 08:59 PM

ஒரு காலத்தில், கோடுகள் போட்ட கைத்தறி சேலைகளுக்கு, தனி மவுசு இருந்தது. அடர் சிவப்பில் மஞ்சள் நிற பார்டர், குங்கும நிறத்தில், மஞ்சள் நிற பார்டர் என, பல நிறங்கள், டிசைன்களில் நெய்யப்படும். இவைகள் பெண்களுக்கு தனி அழகை அளித்தன.
மஞ்சளும், குங்குமமும் மங்களத்தின் அடையாளம். இத்தகைய சேலைகளை பெண்கள் விரும்பினர். இவைகளின் ஆயுட்காலம் அதிகம். நிறம் மங்காது. சருமத்துக்கு இதமாக இருக்கும். இயற்கையான சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அணிந்தால் உடலில் சுமையாகவும் இருக்காது. இதனால், பெண்களுக்கு கைத்தறி சேலைகள் மிகவும் பிடித்தது.
கடந்த 10ம் நுாற்றாண்டில், லிங்காயத் சமுதாய பெண்களின் அடையாளமாக இருந்தது. நாளடைவில் பட்டு, பாலியஸ்டர், பனாரஸ் என, பல விதமான சேலைகள் மார்க்கெட்டில் நுழைந்ததால், கைத்தறி பருத்தி சேலைகள் மாயமாகின. தற்போது இயந்திரங்கள் மூலமாக, சேலைகள் தயாராகின்றன.
நீண்ட காலத்துக்கு பின், சம்பிரதாய முறைப்படி நெய்யப்பட்ட சேலைகளுக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் மார்கெட்டிங் விரிவடைந்துள்ளது. 14 விதமான சேலைகளுக்கு மீண்டும் புத்துயிர் கிடைத்துள்ளது. 'புனர் ஜீவனா' என்ற அமைப்பின் முயற்சியால் இந்த சேலைகளுக்கு மீண்டும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
ஜவுளி வல்லுநர் ஹேமலதா ஜெயின், அமெரிக்காவில் இயற்கை சாயங்கள் குறித்து, ஆராய்ச்சி செய்து வந்தார். அவருக்கு கதக் மாவட்டம், கஜேந்திரகடா தாலுகாவில், செயற்கை நிறங்கள் பயன்படுத்தி, சேலைகள் நெய்யப்பட்ட தகவல் கிடைத்தது. இவற்றின் சிறப்பு பற்றி கிடைத்த தகவல்கள், அவரது ஆர்வத்தை அதிகரித்தன. இந்த சேலைகள் பற்றிய ஆவணங்களை தேட துவங்கினார்.
பெலகாவியின், சவதத்தியில் வசிக்கும் தேவதாசி ஒருவரிடம், அந்த கோடிட்ட சேலை இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற ஹேமலதா, தேவதாசியை சந்தித்து சேலையை பார்த்தார். அதன் தனித்துவத்தை கண்டு ஆச்சரியமடைந்தார். ஆராய்ச்சிக்காக அந்த சேலையை தரும்படி கேட்டார். ஆனால் அவர், 'அது அம்பாளுக்கு அணிவிக்கும் உடை' எனக் கூறி, தர மறுத்தார். அதன்பின் அந்த சேலையில் இருந்து சில நுால் இழைகளை மட்டும் பிரித்து கொண்டு வந்தார்.
ஆராய்ச்சிக்காக சில நுால் இழைகளை எரித்தார்; கருகவே இல்லை. அதன்பின் ஆய்வகத்துக்கு அனுப்பினார். அந்த இழைகள் 200 ஆண்டுகள் பழமையானவை என்பது தெரிந்தது. இத்தனை ஆண்டுகளாகியும், நிறம் மாறவில்லை. சேதமடையவும் இல்லை.
இந்த சேலைகளுக்கு புத்துயிர் கொடுக்க, ஹேமலதா முடிவு செய்தார். கஜேந்திரகடாவின் ஏழை நெசவாளர்களை சந்தித்தார். அவர்களுக்கு நுால், கச்சாப்பொருட்களை வாங்கி கொடுத்து, கைத்தறி சேலைகள் நெய்ய ஊக்கப்படுத்தினார். அதன்பின் கைத்தறிகள் இயங்க துவங்கின. முதலில் ஒன்றிரண்டு தறிகள் இயங்கின. இப்போது நுாற்றுக்கணக்கான கைத்தறிகள் செயல்படுகின்றன.
பாரம்பரிய கைத்தறி சேலைகளை மீண்டும் உருவாக்க, ஹேமலதா 'புனர் ஜீவனா' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அமைப்பின் மூலம், நுாற்றுக்கணக்கான பெண்கள் கைத்தறி சேலைகள் நெய்ய பயிற்சி பெற்றுள்ளனர். 'புனர் ஜீவனா' அமைப்புடன் 80 நெசவாளர்கள் கைகோர்த்துள்ளனர். ஒரு சேலை நெய்ய 250 ரூபாய் முதல் 1,350 ரூபாய் வரை பெண்கள் கூலி பெறுகின்றனர்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மாயமான கோடுகள் போட்ட பருத்தி சேலைகள் மீண்டும் பிரபலமடைய காரணமாக இருப்பவர் ஹேமலதா ஜெயின். இவரால் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. அழிந்து கொண்டிருந்த கைத்தறியை காப்பாற்றியதில், இவருக்கு முக்கிய பங்குள்ளது.
- நமது நிருபர் -