ADDED : ஜூன் 07, 2026 11:26 PM

- நமது நிருபர் -
முதல்வர் சிவகுமார் தலைமையிலான அரசில் இடம் பெற, பெண் எம்.எல்.ஏ.,க்கள் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. அவர்கள், தங்களுக்கு வாய்ப்பளிக்கும்படி மன்றாடுகின்றனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைந்த போது, முதல்வரான சித்தராமையா அமைச்சரவையில், லட்சுமி ஹெப்பால்கர் அமைச்சராகி, மகளிர், குழந்தைகள் நலத்துறை பொறுப்பை ஏற்றிருந்தார். மூன்று ஆண்டுகள் பதவியில் இருந்த இவருக்கு, தற்போதைய முதல்வர் சிவகுமார் அரசில், வாய்ப்பு கிடைக்கவில்லை.
கடும் அதிருப்தி முதற்கட்டத்தில் பெண்களுக்கு வாய்ப்பளிக்காதது குறித்து, எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. காங்கிரஸ் மூத்த தலைவி மார்கரெட் ஆல்வா பகிரங்கமாகவே அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சிவகுமார் அமைச்சரவையில் இடம் பிடிக்க, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமி ஹெப்பால்கர், ரூபகலா, கனீஷ் பாத்திமா, நயனா மோட்டம்மா, அன்னபூர்ணா, உமாஸ்ரீ இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு வாய்ப்பளிக்கும்படி, நெருக்கடி கொடுக்கின்றனர்.
லட்சுமி ஹெப்பால்கர், முதல்வர் சிவகுமாருக்கு நெருக்கமானவர்களில் ஒருவர். பெலகாவி மாவட்டத்தின், பஞ்சமசாலி லிங்காயத் சமுதாய தலைவி. எனவே இவர் மீண்டும் அமைச்சரானாலும், ஆச்சரியப்பட முடியாது.
அமைச்சர் முனியப்பாவின் மகளும், கோலார் மாவட்டம் தங்கவயல் எம்.எல்.ஏ.,வுமான ரூபகலாவும், அமைச்சர் பதவி எதிர்பார்க்கிறார். ஆனால் இவரது தந்தை முனியப்பா, அமைச்சராக இருப்பதால் கோலார் மாவட்டத்துக்கு, மற்றொரு அமைச்சர் பதவி கிடைப்பது சந்தேகம்.
'மாஜி' அமைச்சர் கலபுரகி வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கனீஜ் பாத்திமா, கல்யாண கர்நாடகா பகுதியின், சிறுபான்மை சமுதாய தலைவி. மறைந்த முன்னாள் அமைச்சர் கமருல் இஸ்லாமின் மனைவி. சிவகுமார் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு இடமளிக்க, காங்., மேலிடம் விரும்பினால், கனீஜ் பாத்திமாவின் பெயர் முன்னணியில் இருக்கும்.
ஆனால், கல்யாண கர்நாடகா பகுதியின் கலபுரகி மாவட்டத்தில், ஏற்கனவே இரண்டு அமைச்சர்கள் இருப்பதால், பாத்திமாவின் அமைச்சர் ஆசை நிறைவேறுவது கஷ்டம்.
சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே எம்.எல்.ஏ., நயனா மோட்டம்மா, முன்னாள் அமைச்சர் மோட்டம்மாவின் மகள். புதியவர்களுக்கு, சிக்கமகளூரு மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி வழங்க மேலிடம் நினைத்தால் நயனா மோட்டம்மாவுக்கு அமைச்சராகும் அதிர்ஷ்டம் அடிக்கலாம்.
சித்தராமையா, முதல் முறை முதல்வரான போது, அவரது அமைச்சரவையில் உமாஸ்ரீ மகளிர், குழந்தைகள் மற்றும் கன்னடம், கலாசாரத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது, இவர் எம்.எல்.சி.,யாக இருக்கிறார். எம்.எல்.சி.,களுக்கு அமைச்சரவையில் இடம் தர, கட்சி முடிவு செய்தால், இவர் அமைச்சராகும் வாய்ப்புள்ளது.
பெரும் தலைவலி பல்லாரி மாவட்டம், சன்டூர் தொகுதி எம்.எல்.ஏ., அன்னபூர்ணா துக்காராமும், அமைச்சர் பதவி எதிர்பார்க்கிறார். இவர் பல்லாரி எம்.பி., துக்காராமின் மனைவி. புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க கட்சி விரும்பினால் அன்னபூர்ணா, சிவகுமாரின் அமைச்சரவையில் இடம் பிடிக்கலாம்.
பெண் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் முதல்வர் சித்தராமையா உட்பட மூத்த தலைவர்கள் மூலம், அமைச்சர் பதவிக்கு முயற்சிக்கின்றனர். இது கட்சி மேலிடத்துக்கு, பெரும் தலைவலியாக உள்ளது.
