தந்தைக்கு பாடம் புகட்டிய ' கிக் பாக்சிங் ' வீராங்கனை
தந்தைக்கு பாடம் புகட்டிய ' கிக் பாக்சிங் ' வீராங்கனை
ADDED : பிப் 28, 2025 06:05 AM

பெற்றோரின் ஊக்கத்தினால், விளையாட்டில் ஜொலிக்கும் பலரை, நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் பெண் என்பதால், உதாசீனப்படுத்திய தந்தைக்கு, பாடம் புகட்ட ஒரு பெண், கிக் பாக்சிங்கில் சாதனை செய்கிறார்.
மைசூரை சேர்ந்தவர் பீபி பாத்திமா, 16. இவரது பெற்றோருக்கு இவரையும் சேர்த்து, நான்கு மகள்கள் உள்ளனர். ஆண் குழந்தை பிறக்காததால், கோபமடைந்த தந்தை, மனைவியையும், நான்கு குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு, எங்கோ சென்று விட்டார். பிழைக்க வழி தெரியாமல், குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள தாய் முடிவு செய்தார்.
பீபி பாத்திமாவுக்கு, அக்ரம் பாஷா என்ற ஷப்னா துாரத்து உறவினர். இவர் திருநங்கையாவார். இவர் பீபி பாத்திமாவின் குடும்பத்தினரை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதன்படி அவர்களை பாதுகாத்து வருகிறார். பீபி பாத்திமாவை விளையாட்டில் உயரமான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். இவருக்கு முதுகெலும்பாய் நிற்பவர் ஷம்னா.
பெண் என்பதால் தன்னையும், தன் தாய் மற்றும் சகோதரிகளையும் தவிக்க விட்டு சென்ற தந்தைக்கு பாடம் புகட்ட வேண்டும்; முன்னேற வேண்டும் என்ற பிடிவாதத்தில், பேபி பாத்திமா கிக் பாக்சர் ஆனார். இதில் சாதனையும் செய்துள்ளார். இதுவரை மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் 29 தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளார்.
சமீபத்தில் டில்லியில் நடந்த சர்வதேச அளவிலான 29 தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளார். கடந்த வாரம் டில்லியில் நடந்த சர்வதேச அளவில், 55 கிலோ பிரிவில் பங்கேற்று, வெள்ளி பதக்கம் பெற்றிருந்தார்.
பெண் குழந்தைகள் என, தன் குடும்பத்தை உதறிவிட்டு சென்ற தந்தைக்கு, தகுந்த பாடம் புகட்டி உள்ளார். பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தி உள்ளார். மற்றவருக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
பீபி பாத்திமா கூறியதாவது:
நான்கும் பெண்ணாக பிறந்ததால், ஆண் குழந்தை இல்லை என்பதால், தந்தை எங்களை விட்டு விட்டு சென்றார். ஷப்னா என்ற திருநங்கை எங்களை தத்தெடுத்து காப்பாற்றுகிறார். உணவு, இருப்பிடம் என, எங்களின் அன்றாட தேவையை கவனித்து கொள்கிறார்.
தற்போது, நான் எஸ்.எஸ்.எல்.சி., படிக்கிறேன். ஆண்களும் பெண்களும் சமம் என்பதை காட்ட நான் கிக் பாக்ஸிங்கை தேர்ந்தெடுத்தேன். ஒரு பெண்ணாக சர்வதேச அளவில் சாதித்துள்ளேன். இந்த சாதனையை, என் தந்தையிடம் காட்ட வேண்டும் என்பதே என் குறிக்கோள்.
கடந்த 12 ஆண்டுகளாக, கிக் பாக்சிங் பயிற்சி பெற்று வருகிறேன். பயிற்சியாளர் ஜஸ்வந்த் எனக்கு பயிற்சி அளிக்கிறார். மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். 29 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளேன். ஒலிம்பிக்கில் நாட்டுக்காக விளையாடி பதக்கம் வெல்வதே எனது கனவு. ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல மைசூரு மக்கள், மாநில மக்கள் மற்றும் அரசின் உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
என் கை உடைந்தாலும் கவலையில்லை. நான் அனைவருக்கும், ஒரு உத்வேகமாக இருக்க விரும்புகிறேன். இது தவிர, வீட்டின் மூத்த மகள் என்ற முறையில், குடும்ப நிர்வகிப்பு, என் சகோதரிகளுக்கு கல்வி கற்பிக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அதே நேரத்தில் கிக் பாக்சிங்கில் மேலும் சாதனை செய்ய வேண்டும்; அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஷம்னா கூறியதாவது:
பீபி பாத்திமாவின் தாயார், எனக்கு துாரத்து உறவினர். சாக நினைத்து ஊரை விட்டு வந்த இவர்களை, நான் காப்பாற்றி வருகிறேன். எனக்கு வயதாகிவிட்டது. நடமாட கஷ்டமாக உள்ளது.
நான் பணக்காரி அல்ல. மக்களின் உதவியாலும், பிச்சை எடுத்தும் வாழ்க்கை நகர்கிறது. மைசூரு மக்கள் எங்களை கைப்பிடித்தனர். பீபி, கிக் பாக்சிங் போட்டிக்கு செல்ல, போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தனர்.
கிக் பாக்சர் பீபி பாத்திமா, இனி தன் தாய், சகோதரிகளை கவனித்து கொள்வார். எனவே அவரது திறமையை கவனித்து, அவருக்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என, மாநில அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -