UPDATED : அக் 09, 2026 04:09 AM
ADDED : அக் 08, 2026 07:14 PM

- நமது நிருபர் -
பொதுவாக, எட்டு வயது சிறார்கள், மொபைல் போனில் கேம்ஸ் விளையாடுவது, பொம்மை கார்கள், பைக்குகளுடன் விளையாடி பொழுது போக்குவர்; நண்பர்களுடன் விளையாடுவர். ஆனால், எட்டு வயது சிறுவன் பைக் ரேசில் ஜொலிக்கிறார். பல விருதுகளை குவித்து, அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறார்.
தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவின், மத்தட்யா கிராமத்தில் வசிப்பவர் முகமது ரபீக். இவரது மகன் அயான் ராபி, 8. இவருக்கு சிறு வயதில் இருந்தே, வேகமாக ஓடுவதில் அதிக ஆர்வம் இருந்தது. சைக்கிளில் வேகமாக சவாரி செய்வார். அதன் பின் மோட்டார் பைக் சவாரியும், அவரை ஈர்த்தது.
மகனின் ஆர்வத்தை பார்த்த, தந்தை முகமது ரபீக், மகனுக்கு அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதால், தமிழகம், கோவையின் மோட்டார் ரேஸ் பயிற்சி மையத்துக்கு, மகனை அழைத்து சென்றார்.
அங்கு பைக் ஓட்டிய அயானின் திறமையை பார்த்த பயிற்சியாளர், சிறுவனுக்கு சரியான பயிற்சி அளித்தால், பைக் ரேசில் சிறந்த சாதனை செய்வார் என, ஆலோசனை கூறினார்.
அதன்படி அயானுக்கு, முகமது ரபீக் பைக் பயிற்சியளிக்க துவங்கினார். மகனுக்காக, 50 'சிசி' திறன் கொண்ட சிறிய பைக் வாங்கினார். அதில் அயான் பயிற்சியை துவக்கினார். ஆனால் சில மாதங்களில், பைக் பழுதடைந்தது.
கடந்த எட்டு மாதங்களுக்கு முன், 65 'சிசி' மினி ரேஸ் பைக் வாங்கி கொடுத்தார்.
இதில் பயிற்சி பெறும் அயான், அடுத்தடுத்த பைக் ரேஸ் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வெல்கிறார். கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நடந்த, பல போட்டிகளில் பங்கேற்ற அயான், 40க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றுள்ளார்.
சமீபத்தில் கோவையில் நடந்த, 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். அவருக்கு 'பெஸ்ட் ரைடர், அண்டர் - 10 ஓவர் ஆல் வின்னர்' விருதுகள் கிடைத்தன.
இவை, அவரது தன்னம்பிக்கையை அதிகரித்தன.
அயானுக்கு பயிற்சியளித்து வழிகாட்டுவோரில், மங்களூரின், எஸ்.ஏ., மோட்டோ டிசைன் நிறுவனத்தின் சுனில் ஆச்சார்யா முக்கியமானவர்கள். வார இறுதி நாட்களில் அயான் சிறப்பு பயிற்சி பெறுகிறார். அடுத்த போட்டிகளுக்கு தன்னை தயார்படுத்துகிறார்.
இது குறித்து, முகமது ரபீக் கூறியதாவது:
என் மகன் அயான், பல பைக் ரேஸ்களில் பங்கேற்று, விருதுகள் பெற்றுள்ளார். இவருக்கு வரும் நாட்களில், எம்.ஆர்.எப்., மோட்டோ நேஷனல் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் கனவு உள்ளது. ஆனால் அதில் பங்கேற்க, 9 வயது முடிந்து, 10 வயது துவக்கியிருக்க வேண்டும்.
இதை மனதில் கொண்டு, போட்டிகளில் பங்கேற்பதை விட, பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். தற்போது பெங்களூரில் தங்கி, என் மகனுக்கு பயிற்சி அளிக்கிறோம். தேசிய ரேஸ் சாம்பியன் சுஹேல் அகமது பயிற்சி அளிக்கிறார். வரும் நாட்களில் அவர் பைக் ரேசிங்கில் பல சாதனைகள் செய்ய வேண்டும் என்பது, எங்களின் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
