ADDED : ஜூலை 10, 2025 11:12 PM

ஆந்திராவின் விஜயநகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 5வது தேசிய செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில், கர்நாடகாவின் சமர்த் ஜெகதீஷ் ராவ், வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
உத்தரகன்னடா மாவட்டம், ஹொன்னாவரா தாலுகாவில் வசிப்பவர் சமர்த் ஜெகதீஷ் ராவ். இவர் திறமையான செஸ் விளையாட்டு வீரர். இதுவரை தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள் வென்றவர்.
சமர்தின் தந்தை ஜெகதீஷ் ராவ், வங்கியில் பணியாற்றுகிறார். தாயார் வினுதா பட் அரசு ஐ.டி.ஐ.,யில் பயிற்சி ஆசிரியராக பணியாற்றுகிறார். சமர்த் மாற்றுத்திறனாளி. தன் அன்றாட தேவைகளுக்கு மற்றவரின் உதவி இல்லாமல் செய்ய முடியாது.
ஆனால் மனதளவில் உறுதியானவர். செஸ் விளையாட்டில் பல சாதனைகள் செய்துள்ளார். கல்லுாரி மாணவராக இருந்த போதே, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றுள்ளார். பயிற்சியாளரிடம் மட்டுமின்றி, ஆன்லைன் மூலமாகவும், தன் திறமையை வளர்த்து கொள்கிறார்.
மூன்றாவது உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில், வெள்ளி பதக்கம் பெற்றார்.
டாடா ஸ்டீல் 4வது அனைத்திந்திய மாற்றுத்திறனாளிகள் செஸ் போட்டியில் வெற்றி பெற்று, சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர். 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான லாவா கோப்பை செஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். மாநில அளவிலான போட்டியில் இரண்டாவது இடம் பெற்றார்.
உலக சாம்பியன் பட்டம் பெற வேண்டும் என்பது, இவரது கனவாகும். இதற்காக தன்னை தயார்ப்படுத்துகிறார். தற்போது ஹொன்னாவராவில் தபால் அலுவலகத்தில், சமர்த் பணியாற்றுகிறார்.
ஆந்திராவின், விஜயநகராவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 5வது தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, இம்மாதம் 5ம் தேதியன்று முடிவடைந்தது. இதில் 13 மாநிலங்களில் இருந்து, 101 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
சிறப்பாக விளையாடிய சமர்த், வெள்ளிப்பதக்கம் வென்றார். இதற்கு முன் 2022, 2024ல் நடந்த இதே சாம்பியன்ஷிப் போட்டிகளில், இவர் தங்கப்பதக்கங்களை வென்றிருந்தார்.
கோவாவில் 24வது மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டி ஜூலை 21ம் தேதி நடக்க உள்ளது. இப்போட்டிக்கு சமர்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக பயிற்சி பெற்று வருகிறார். மாற்றுத்திறனாளி மனம் தளராமல் விளையாட்டில் சாதனை செய்யும் சமர்த், மற்றவருக்கு முன் மாதிரியாக உள்ளார். இவருக்கு குடும்பத்தினர் பக்கபலமாக நிற்கின்றனர்.
- நமது நிருபர் -