ADDED : மே 15, 2025 11:31 PM

பெங்களூரு ஹெப்பாலை சேர்ந்தவர் தக் ஷின் சூர்யா, 15. இவர் இந்திரா நகரில் உள்ள, 'செவன்த் சென்சஸ் மான்டிசோரி' பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே டேக்வோண்டா பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
பள்ளி அளவில் நடக்கும் அனைத்து டேக்வோண்டோ போட்டிகளிலும், கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்; பல போட்டிகளில் வெற்றி பெற்றார். இதை பார்த்த அவரது பயிற்சியாளர் பவன் காரடி, சூர்யாவிற்கு தீவிர பயிற்சிகளை அளித்தார். இதனால் மாநில போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றார்.
இதற்கிடையில், மலேஷியாவில் மே 1 முதல் 4ம் தேதி வரை நடந்த இன்டர்நேஷனல் டேக்வோண்டா போட்டியில், 15 முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். இந்தியா, வங்க தேசம், மியான்மர், சிரியா, மலேஷியா நாடுகளின் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், இந்தியா சார்பாக, 'நம்ம பெங்களூரு' சூர்யாவும் கலந்து கொண்டார். நான்கு பிரிவுகளில் வெற்றி பெற்று அசத்தினார். 2 தங்கம்; 1 வெள்ளி; 1 பித்தளை மெடல்கள் வாங்கினார்.
இதை பார்த்த அவரது பயிற்சியாளர், பள்ளி நிர்வாகத்தினர் என அனைவரும் ஆனந்தம் அடைந்தனர். பயிற்சியாளர் பவன் காரடி கூறுகையில், ''சூர்யாவின் 12 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த பரிசு இந்த வெற்றி. அவருக்கு இது மிகப்பெரிய கவுரவத்தை தந்து உள்ளது,'' என்றார்.
சூர்யா படிக்கும் பள்ளியின் முதல்வர் ராஜேஸ்வரி கூறுகையில், ''சூர்யாவின் வெற்றி எங்கள் பள்ளி முழுவதும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டது,'' என்றார்
. - நமது நிருபர் -