இலங்கை டு இந்தியா 11 மணி நேரம் நீந்தி பெங்களூரு தம்பதி சாதனை
இலங்கை டு இந்தியா 11 மணி நேரம் நீந்தி பெங்களூரு தம்பதி சாதனை
ADDED : மே 15, 2026 03:32 AM

- நமது நிருபர் -
பொதுவாக தம்பதி ஒருங்கிணைந்து ஒரு வேலையை செய்தால், அதில் வெற்றி தான் பெரும்பாலும் கிட்டும். அந்த வகையில், பெங்களூரின் இளம் தம்பதி ஒன்றாக சேர்ந்து, நீச்சல் அடித்து சாதனை படைத்து உள்ளனர்.
அந்த தம்பதியின் பெயர் டேனிஷ் அப்தி - விருஷாலி பிரசாத். இருவரும் ஐ.டி., நிறுவன ஊழியர்கள். இலங்கையின் தலைமன்னார் கடற்கரையில் இருந்து, தமிழகத்தின் தனுஷ்கோடி வரை, தொடர்ந்து, 10 மணி நேரம் 45 நிமிடங்கள் நீச்சல் அடித்து இருக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
நாங்கள் சாதித்து விட்டோம். மே 7ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு தலைமன்னாரில் இருந்து கடலில் நீந்த துவங்கினோம். மதியம், 3:15 மணிக்கு தனுஷ்கோடியை அடைந்து விட்டோம். பாக் ஜலசந்தியில் 32 கி.மீ., துாரம் நீந்தியது பெரிய சவாலாக இருந்தது.
எங்களுக்கு பாதுகாப்பாக, நீச்சல் அடித்த எங்களை தொடர்ந்து படகு வந்தது. இந்த பயணம் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் சவாலை நிறைவேற்றி இருப்பது மகிழ்ச்சியாகவே உணருகிறோம். இத்தனைக்கும் நாங்கள் இருவரும் தொழில்ரீதியான நீச்சல் வீரர்கள் இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன் தான் நீச்சல் கற்க ஆரம்பித்தோம்.
மிகவும் குறுகிய ஆண்டுகளில் இதுபோன்ற சவாலில் பங்கேற்போம் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை.
இந்த பயணம் எங்களுக்கு மன வலிமையை அதிகரித்து உள்ளது. பயிற்சியாளர்கள் சதீஷ், யாகூப்புக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்திய கடலோர காவல் படை, மருத்துவ குழுவும் உறுதுணையாக இருந்தனர்.
இன்னும் இதுபோன்ற நிறைய சாதனைகளை மேற்கொள்ள தயாராகி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
