சர்வதேச போட்டி வேறு மாநிலத்துக்கு மாற்றம் பெங்களூரு ரசிகர்கள் ஏமாற்றம்
சர்வதேச போட்டி வேறு மாநிலத்துக்கு மாற்றம் பெங்களூரு ரசிகர்கள் ஏமாற்றம்
ADDED : ஆக 14, 2025 11:19 PM

உள்ளூர் போட்டிகளை தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும், வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டதால், கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
உலகின் புகழ் பெற்ற மைதானங்களில், 50 ஆண்டு பழமையான, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தின் வரலாற்றில் ஒரு நாள், டெஸ்ட், டி 20 என 750க்கும் மேற்பட்ட போட்டிகள் நடந்துள்ளன.
ஆர்.சி.பி., வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துயர சம்பவம், இம்மைதானத்துக்கு, கரும்புள்ளியாக மாறியது.
திட்டம் நடந்து முடிந்த மஹாராணி கோப்பை, நடந்து வரும் மஹாராஜா கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டியை, சின்னசாமி மைதானத்தில் நடத்த, கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டது.
ஆனால், பெங்களூரு போலீஸ் துறை அனுமதி மறுத்ததால், பெண்களுக்கான மஹாராணி கிரிக்கெட் போட்டி, பெங்களூரில் உள்ள வேறொரு மைதானத்தில் நடந்து முடிந்தது.
ஆண்களுக்கான மஹாராஜா கிரிக்கெட் போட்டி, மைசூரில் உள்ள மஹாராஜா மைதானத்தில் நடந்து வருகிறது.
நடப்பாண்டு பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், செப்., 30 முதல் நவ., 2ம் தேதி வரை, இந்தியாவில் நடக்க உள்ளன.
இதில், துவக்க போட்டி, அரையிறுதி, இறுதி போட்டிகளை, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடத்த ஐ.சி.சி., எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டிருந்தது.
நீட்டிப்பு இது தொடர்பாக கே.எஸ்.சி.ஏ.,விடம், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், ஆக., 9ம் தேதிக்குள் போலீஸ் துறையிடம் அனுமதி பெறும்படியும் கூறியிருந்தது.
கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருவதால், ஆக., 11ம் தேதி வரை அனுமதி பெற ஐ.சி.சி., காலத்தை நீடித்திருந்தது.
இதையடுத்து சங்கத்தினரும், பெங்களூரு போலீஸ் துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்திய கிரிக்கெட் ஆணையம், இம்மாதம் 11ம் தேதி இரவு கே.எஸ்.சி.ஏ., உறுப்பினர்களை தொடர்பு கொண்டு, போட்டிகளை பெங்களூரில் இருந்து மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
தற்போதைய தகவலின்படி, இப்போட்டிகள் கேரளாவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், கே.எஸ்.சி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 750க்கும் மேற்பட்ட போட்டிகள் நடந்துள்ளன. 15 சீசன் ஐ.பி.எல்., போட்டிகளையும் நடத்தி உள்ளது. இது, உலகின் மிகவும் பிரபலமான மைதானங்களில் ஒன்றாகும்.
கூட்ட நெரிசல் சம்பவம் தனியார் விழாவில் நடந்தது; போட்டி நடக்கும் போது அல்ல என்பதை போலீசாரை நம்பவைக்க முயற்சித்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மஹாராணி, மஹாராஜா கிரிக்கெட் போட்டிகளை காண முடியாமல் தவித்த ரசிகர்கள், உலக பெண்கள் கிரிக்கெட் போட்டியையாவது காணலாம் என ஆசைப்பட்டனர். ஆனால், அவர்களின் ஆசை நிராசையானது.
- நமது நிருபர் -