அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டனாக அசத்திய பெங்களூரு பெண்
அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டனாக அசத்திய பெங்களூரு பெண்
ADDED : ஏப் 04, 2025 07:03 AM

இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் எங்கு சென்றாலும் மரியாதை தான். வெளிநாட்டு நிறுவனங்கள், அரசியலில் கூட இந்தியர்கள் உயர் பதவியில் உள்ளனர். இது நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாக உள்ளது. அமெரிக்காவில் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பெங்களூரை சேர்ந்த பெண் இருந்தார்.
பெங்களூரை சேர்ந்தவர் சிந்து ஸ்ரீஹர்ஷா, 36. இவர், தற்போது அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். தனது 9 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடுகிறார். இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீராங்கனை ஸ்மிதா ஹரிகிருஷ்ணா தான், சிந்துவுக்கு ரோல் மாடல்.
ஸ்மிதா, தன் வீட்டின் அருகே உள்ள சிறுவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியதை கேள்விப்பட்டு தான், சிந்துவுக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை வந்ததாம். வலது கை பேட்ஸ்மேனான சிந்து, விக்கெட் கீப்பிங்கும் செய்ய கூடியவர். பள்ளி, கல்லுாரி அணிகளில் சிறப்பாக விளையாடியதால் 'இந்தியா ஏ' மகளிர் அணியில் இடம் கிடைத்தது. சிறப்பாக விளையாடி அணிக்கு தனது பங்களிப்பை கொடுத்தார்.
கடந்த 2014ம் ஆண்டு, அவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. இதனால் அங்கு குடிபெயர்ந்தார். அங்கு கிளப் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றார். இதனால் அவருக்கு அமெரிக்க அணியில் இடம் கிடைத்தது. கடந்த 2019ல் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அந்த ஆண்டு நடந்த உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியில், அமெரிக்கா அணியை மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வைத்தார். அந்த தொடரில் சிந்து மட்டும் 80 ரன்கள் விளாசினார். பெண்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் குழுவிலும் சிந்து உள்ளார்.
இதுவரை 32 'டி 20' போட்டிகளில் விளையாடி 530 ரன்களும்; ஏழு ஒரு நாள் போட்டியில் 200 ரன்களும் எடுத்து உள்ளார். பீல்டிங்கில் 19 கேட்ச் பிடித்து உள்ளார். ஸ்டெம்பிங் முறையில் நான்கு பேரை ஆட்டமிழக்க செய்து உள்ளார். கடந்த மாதம் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். - நமது நிருபர் -

