பாடி பில்டிங் போட்டியில் சிக்கமகளூரு மாணவர் சாதனை
பாடி பில்டிங் போட்டியில் சிக்கமகளூரு மாணவர் சாதனை
ADDED : ஜூன் 04, 2026 11:01 PM
- நமது நிருபர் -
சிக்கமகளூரு என்றால், அங்குள்ள இயற்கை அழகு, நம் கண் முன்னே வந்து செல்லும். தற்போது, சிக்கமகளூரின் பெருமையை உயர்த்தியுள்ளார் மாணவர் ஒருவர். இவர், உடல் திறன் போட்டியில், தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.
சிக்கமகளூரு நகரின், கோட்டே கிராமத்தில் வசிப்பவர் வீரேஷ் டிட்டிமனி. இவரது மகன் ரேவந்த் பிரசாத், 20. இவர் பெங்களூரின், எம்.எஸ்.ராமையா கல்லுாரியில், பி.பி.ஏ., மற்றும் எல்.எல்.பி., படித்து வருகிறார். இவர் படிப்பில் படுசுட்டி. அது மட்டுமின்றி, சிறந்த, 'பாடி பில்டராகவும்' திகழ்கிறார்.
பல ஆண்டுகளாக கடுமையான உடற்பயிற்சிகள் செய்து, உடலை முறுக்கேற்றியுள்ளார். இவர் ஆரம்பத்தில் பல இடங்களில் நடந்த, பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று, தோல்வியடைந்தார். அதற்காக அவர் மனம் தளரவில்லை.
தோல்வியே வெற்றியின் முதற்படி என, உணர்ந்து இரவு பகலாக உடலை வருத்தி, பயிற்சி செய்து, தன் இலக்கை எட்டி சாதனை செய்துள்ளார். சமீபத்தில் மும்பையின், ரத்னகிரியில் 25 வயதுக்கு உட்பட்டோருக்கான, 'பாடி பில்டிங்' போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற ரேவந்த் பிரசாத், வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
அது மட்டுமின்றி, ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் அவருக்கு கிடைத்தது. ரேவந்த் பிரசாத்தின் சாதனையை கண்டு, அனைவரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். இவருக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்துள்ளது. சிக்கமகளூரின் பெருமையை தேசிய அளவில் உயர்த்தியதாக, எம்.எல்.சி., ரவி உட்பட, பல அரசியல்வாதிகள் பாராட்டினர். இளம் விளையாட்டு வீரர்களுக்கு, இவர் ஊக்கமளிப்பதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
