இறகு பந்து போட்டியில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் திவ்யா
இறகு பந்து போட்டியில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் திவ்யா
ADDED : மே 15, 2026 03:31 AM

- நமது நிருபர் -: குடகு மாவட்டம், வஜ்ரபேட் தாலுகா நங்கலா கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா பீமையா, 18. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்வில், பி.யு., 2ம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை போப்பண்டா. இவர் முன்னாள் இறகுப்பந்து பயிற்சியாளராக இருக்கிறார். இவது தாய் குசுமாவும் முன்னாள் தடகள வீராங்கனை ஆவார்.
மொத்தத்தில், திவ்யாவின் குடும்பமே விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டது. திவ்யாவும் தன் சிறு வயதிலிருந்தே இறகுப்பந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இவர், 18 வயதுக்கு உட்பட்ட மாவட்ட, மாநில அளவிலான இறகுப்பந்து போட்டிகளில், பல முறை பதக்கங்களை வென்றுள்ளார். இதனால், இவருக்கு, 2023ல், 'பால கவுரவ்' விருதை வழங்கி, மாநில விளையாட்டுத்துறை வழங்கி கவுரவித்தது.
இவர், தேசிய அளவிலான போட்டிகளில் கர்நாடகாவின் சார்பாக பங்கேற்றார். உத்தர பிரதேசத்தின் லக்னோவில் 2025ல் நடந்த அகில இந்திய சீனியர் தர வரிசை போட்டியில், கலப்பு இரட்டையர் போட்டியில், ஆர்.பி.ஜோர்ன் ஜேசனுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் தங்க பதக்கத்தை வென்றார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம், கஜகஸ்தானில் நடந்த சர்வதேச இறகுப்பந்து போட்டியில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், நம் நாட்டின சார்பாக பங்கேற்றார். இப்போட்டியில், எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினார்.
தேசிய அளவிலான ஜூனியர் இறகுப்பந்து போட்டி சமீபத்தில் பெங்களூரில் நடந்தது. இப்போட்டியில், திவ்யா, ஹரியானாவின் பருணியுடன் சேர்ந்து விளையாடினார். இந்த ஜோடி, பட்டத்தை வென்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம், வரும் ஜூன் 26 முதல், ஜூலை 5ம் தேதி வரை, ஜப்பானில் நடக்கும் ஆசிய அளவிலான இறகுப்பந்து போட்டியில், இந்திய அணியின் சார்பாக திவ்யா போட்டியிட உள்ளார்.
இப்போட்டியில், வெற்றி பெற்று தேசத்திற்கு பெருமை சேர்க்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
