டேபிள் டென்னிஸ் முன்னாள் பயிற்சியாளர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்
டேபிள் டென்னிஸ் முன்னாள் பயிற்சியாளர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்
ADDED : மே 21, 2026 10:07 PM

- நமது நிருபர் -
'செய்யும் தொழிலே தெய்வம்' என, பசவண்ணர் அறிவுறுத்தினார். இன்றைக்கும் பலர், செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து செய்கின்றனர். இதற்கு சிறந்த உதாரணம், ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்தி. இவர் டேபிள் டென்னிஸ் அணியின், முன்னாள் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகையே புரட்டி போட்ட, கொரோனா தொற்று, கர்நாடகாவையும் விட்டு வைக்கவில்லை. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை, வீதிக்கு கொண்டு வந்தது. குரு மூர்த்தியும் கூட, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர். கொரோனா கால் பதிப்பதற்கு முன், அவர் கர்நாடக டேபிள் டென்னிஸ் பயிற்சியாளராக பணியாற்றினார். இவரிடம் பயிற்சி பெற்ற பலர், விளையாட்டு போட்டிகளில் சாதனை செய்துள்ளனர்.
கொரோனா பரவிய நேரத்தில், அனைத்து விளையாட்டுகளும் ஸ்தம்பித்தன. இதன் விளைவாக, குருமூர்த்தி வேலையை இழந்தார். குடும்பத்தை காப்பாற்ற வேறு வேலை தேட வேண்டி வந்தது. இறுதியில் ஆட்டோ ஓட்டுநராக, வாழ்க்கை நடத்துகிறார்.
தனக்கும், தன் குடும்பத்துக்கு சோறு போடும் ஆட்டோ ஓட்டுநர் பணியை, முழு மனதுடன் செய்து வருகிறார்.
ஆனால், இவருக்குள் உள்ள விளையாட்டு பயிற்சியாளர் திறன், இன்னும் அப்படியே உள்ளது. அதை பயன்படுத்த இன்னும் காலம் கூடி வரவில்லை.
இப்போதும் அவர் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளராக, தயாராக இருக்கிறார். எனவே, தன் ஓட்டுநர் இருக்கையின் பின் புறம், மொபைல் போன் எண் எழுதி வைத்துள்ளார். பெங்களூரில் யாருக்காவது, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் இருந்தால், பயிற்சியளிக்க தயாராக இருக்கிறார்.
கிளப், அபார்ட்மென்ட், பள்ளிகளில் பயிற்சியாளர் தேவையென்றால், 78992 10897 என்ற எண்ணில் குருமூர்த்தியை தொடர்பு கொள்ளலாம்!
