தடகள போட்டியில் 3 தங்கம் கள்ளக்குறிச்சி மாணவி அசத்தல் தடகள போட்டியில் கள்ளக்குறிச்சி மாணவி அசத்தல்
தடகள போட்டியில் 3 தங்கம் கள்ளக்குறிச்சி மாணவி அசத்தல் தடகள போட்டியில் கள்ளக்குறிச்சி மாணவி அசத்தல்
ADDED : ஜூன் 06, 2025 06:12 AM

பெங்களூரின் கம்மனஹள்ளி ஆர்.எஸ்.பாளையா ஜானகிராம் லே - அவுட்டில் வசிப்பவர் செல்வராஜ். இவரது மனைவி தெய்வநாயகி. இவர்களது பூர்வீகம் தமிழகத்தின் கள்ளக்குறிச்சி. செல்வராஜ் - தெய்வநாயகியின் மகள் வனிஷா, 17.
பெங்களூரு பிரேசர் டவுனில் உள்ள செயின்ட் ஜோசப் பி.யு., கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு முடித்து உள்ளார். தேர்வில் 625 க்கு 470 மதிப்பெண்களும் பெற்று உள்ளார். வனிஷா தடகள வீராங்கனை ஆவார். கல்லுாரி அளவில் நடந்த போட்டிகளில் நிறைய பரிசுகளை பெற்று அசத்தி உள்ளார்.
கடந்த வாரம் கோவாவில் நடந்த தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றார். இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஐந்து மீட்டர் மாரத்தான் ஓட்டம்; 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம்; கோகோ குழு போட்டியில் குழு போட்டி என மூன்று பிரிவுகளில் தங்க பதக்கம் வென்று அசத்தினார்.
வனிஷாவின் பயணம் குறித்து அவரது தாய் தெய்வநாயகி கூறுகையில்:
ஆறாம் வகுப்பு படிக்கும் போது இருந்தே, வனிஷாவுக்கு விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட்டது. குறிப்பாக ஓட்டப்பந்தயத்தில் அதிக ஆர்வம் காட்டினார். பள்ளி அளவில் நடந்த போட்டிகளில் பரிசுகள் வென்றார்.
ஓட்டப்பந்தயத்தில் நிறைய சாதிக்க வேண்டும். தேசிய அளவிலும், இந்தியாவுக்காகவும் விளையாட வேண்டும் என்று சொல்லி கொண்டே இருப்பார். இதனால் அவரது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தோம். ஓட்டப்பந்தயத்தில் அவர் சாதிக்க நானும், எனது கணவர் செல்வராஜும் தொடர்ந்து ஊக்கம் அளித்தோம். கோவாவில் நடந்த போட்டியில் அவர் 3 தங்க பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நிறைய பதக்கங்களை வாங்கி உள்ளார். எதிர்காலத்தில் இந்தியாவுக்காக அவர் விளையாடுவதை பார்க்க ஆர்வமாக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வனிஷாவை பாராட்ட விரும்புவோர் 99860 12923 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
-நமது நிருபர் -.