தேசிய அணியில் கர்நாடகா வீரர்கள் ஹாக்கி வீரர் பூவண்ணா விருப்பம்
தேசிய அணியில் கர்நாடகா வீரர்கள் ஹாக்கி வீரர் பூவண்ணா விருப்பம்
ADDED : ஆக 14, 2025 11:20 PM

''தேசிய ஹாக்கி அணியில், கர்நாடகாவில் இருந்து அதிகளவில் வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்,'' என தேசிய ஹாக்கி அணியில் இடம் பிடித்த பூவண்ணா தெரிவித்தார்.
குடகுவை சேர்ந்தவர் பூவண்ணா, 22. பெங்களூரில் வசித்து வரும் இவர், ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஹாக்கி போட்டியில் இந்திய அணியின் 24 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்த, கர்நாடகாவை சேர்ந்த ஒரே வீரர்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
குடகில் பெரிய அளவில் ஹாக்கி திருவிழா நடக்கும். சிறு வயதில் இருந்து அணிக்காக விளையாடினேன். 5ம் வகுப்பில் ஹாக்கி விளையாட துவங்கினேன். எனக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் விளையாடுவேன்.
நான் ஹாக்கி வீரனாக வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பியவர் எனது தாயார் தான். அஸ்வினி நாச்சப்பாவின் அகாடமியில் என்னை சேர்த்தார். அங்கு இருந்த மூன்று ஆண்டுகள், ஹாக்கியில் நான் சிறப்பாக வளர உதவின. அங்குள்ள பயிற்சியாளர்கள் எனது உடல் தகுதி அடிப்படையில் கற்றுக் கொடுத்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன், தேசிய அணியில் இடம் பெற வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறியது. தேசிய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களிடம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
இந்திய அணி வீரர்களான மன் பிரீத் சிங்கின் வலிமை, நிலைத்தன்மை, விளையாட்டின் மீதான அவரது அணுகுமுறை; ஹர்டிக்கின் கடின உழைப்பு; கடந்த இரண்டு ஆண்டுகளில் அணியில் பல மாற்றத்தை ஏற்படுத்திய அபிஷேக், சுக்ஜித் சிங் ஆகியோர் சிறப்பாக விளையாடுகின்றனர்.
தினமும் காலை 6:30 மணிக்கு எழுந்து புத்துணர்ச்சி பெற்று, 8:30 மணிக்கு அன்றைய பயிற்சிக்கு ஆயத்தமாகிறேன்.
தேசிய ஹாக்கி அணியில் கர்நாடகாவின் குடகுவை சேர்ந்த வீரர்கள் யாராவது ஒருவர் அல்லது இருவர் இருப்பர். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரகுநாத், உத்தப்பா, சுனில் போன்ற பல கர்நாடக வீரர்கள் இடம் பெற்றிருந்தது மகிழ்ச்சி அளித்தது. இப்போது கர்நாடகா சார்பில் நான் மட்டுமே இடம் பெற்றிருப்பது வருத்தமாக உள்ளது. இன்னும் பல கர்நாடக வீரர்கள் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.
திறமையான வீரர்களை அடையாளம் காண, பல போட்டிகளை நடத்த வேண்டும். நுாற்றுக்கணக்கான வீரர்கள் இருக்கும் மாநிலத்தில், ஒரு போட்டியின் மூலம் அவர்களின் திறமையை மதிப்பிட முடியாது. ஆனால், பஞ்சாப்பில் குழந்தைகள் தங்களின் திறமையை வெளிப்படுத்த, போதுமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -