ADDED : ஏப் 04, 2025 07:04 AM

சாதனைக்கு வயது எப்போதும் தடையாக இருந்தது இல்லை. சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த வயதிலும் சாதிப்பர். இதற்கு எடுத்துக்காட்டாக, கர்நாடகாவை சேர்ந்த 14 வயது சிறுமி உள்ளார்.
கோலாரின் சீனிவாசப்பூர் குப்பஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத்; நீச்சல் பயிற்சியாளர். இவரது மனைவி ரூபா. இந்த தம்பதியின் மகள் டிம்பிள் சோனாக் ஷி கவுடா, 14. தற்போது மனைவி, மகளுடன் பெங்களூரு வித்யாநகரில் மஞ்சுநாத் வசித்து வருகிறார்.
நீச்சல் வீராங்கனையான டிம்பிள், சமீபத்தில் குஜராத்தில் நடந்த 34வது வீர் சாவர்க்கர் அகில இந்திய கடல் நீச்சல் போட்டியில் பங்கேற்றார். இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 16 நீச்சல் வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர்.
பாராட்டு மழை
குஜராத்தின் அட்ரி கடற்கரையில் இருந்து 30 கி.மீ., துாரத்தில் உள்ள வீர்வால் ஜெட்டி கடற்கரை வரை நீந்தி வர வேண்டும் என்பதே போட்டி. இந்த துாரத்தை 3 மணி நேரம் 33 நிமிடம் 25 வினாடிகளில் எட்டி புதிய சாதனை படைத்தார் டிம்பிள். இதற்கு முன்பு 3 மணி நேரம் 47 நிமிடங்களில் நீந்தி வந்ததே சாதனையாக இருந்தது. டிம்பிளுக்கு தற்போது பாராட்டு மழை குவிந்து வருகிறது.
டிம்பிள் கூறுகையில், ''நீச்சலில் பெரிய அளவில் சாதனை படைத்து, நாட்டிற்கு புகழை கொண்டு வருவது எனது இலக்கு. அந்த இலக்கை நோக்கி கடினமாக உழைத்து வருகிறேன். தினமும் ஆறு மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்கிறேன். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது எனது குறிக்கோள்.
''குஜராத்தில் 30 கி.மீ., துாரம் கடலில் தொடர்ந்து நீந்தினேன். கடலில் நீந்துவது எப்போது சவால் தான். ஆனால் முந்தைய சாதனையை முறியடித்தது எனக்கு மகிழ்ச்சி,'' என்றார்.
துரோணாச்சார்யா விருது
டிம்பிள் தந்தை மஞ்சுநாத் கூறுகையில், ''டிம்பிளுக்கு 2 வயதாக இருக்கும் போதே, அவருக்கு நீச்சல் அடிக்க கற்று கொடுத்தேன். கடின உழைப்பால் தற்போது சாதனை படைத்து உள்ளார். எனது மகன் சிராயுவுக்கும், நீச்சல் பயிற்சி கொடுக்கிறேன்.
மகளின் நீச்சல் பயிற்சிக்காக சொந்த ஊரில் இருந்து, பெங்களூருக்கு குடிபெயர்ந்தோம். துரோணாச்சார்யா விருது பெற்ற பயிற்சியாளர் நிஹார் அமீன் நடத்தும், டால்பின் அகாடமியில் டிம்பிள் பயிற்சி எடுக்கிறார்,'' என்றார்.
கடந்த ஆண்டு நவம்பரில் பெங்களூரு குஞ்சூர் ஏரியில் நடந்த தேசிய அளவிலான 10 கி.மீ., துார நீச்சல் போட்டியிலும் டிம்பிள் முதலிடம் பிடித்தார். இது தவிர மஹாராஷ்டிராவின் விஜயதுர்க், மால்வான் பகுதியில் நடந்த நீச்சல் போட்டியிலும் அவர் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. - நமது நிருபர் -

