சர்வதேச யோகா போட்டியில் முதலிடம் பிடித்த குந்தாபூர் மாணவி
சர்வதேச யோகா போட்டியில் முதலிடம் பிடித்த குந்தாபூர் மாணவி
ADDED : ஜூலை 23, 2026 11:07 PM

- நமது நிருபர் -:
குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த சர்வதேச யோகா போட்டியில், உடுப்பியை சேர்ந்த மாணவி தங்கப்பதக்கம் வென்று, நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
உடுப்பி மாவட்டம், குந்தாபூர் தாலுகாவின் அரசம்மனகானு கிராமத்தை சேர்ந்தவர் ராகவேந்திர ஷெட்டி - மல்லிகா ஷெட்டி தம்பதி. இவர்களின் மகள் ரிஷா ஷெட்டி, 12. தற்போது, பெங்களூரில் உள்ள, எஸ்.எஸ்.எம்., பப்ளிக் பள்ளியில் படித்து வருகிறார்.
கடந்த மாதம், ஆமதாபாத்தில் நடந்த 10 - 14 வயதுக்கு உட்பட்டோருக்கான, முதல் உலக யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப் - 2026 போட்டியில் இந்தியா சார்பில் ரிஷா ஷெட்டி பங்கேற்றார். இதில், கடினமான பின்வளைவு, கலைநயமிக்க குழு போட்டியில் முதலிடம் பெற்றார்.
இவர், தன் 8 வயதில் யோகா குரு தீபக் ஜேவின் வழிகாட்டுதலின் கீழ் யோகா கற்க துவங்கினார். யோகாவின் மீது இருந்த ஆர்வத்தால், துபாயில் நடந்த சர்வதேச போட்டியில் மூன்று பதக்கங்கள் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.
கடந்தாண்டு அவரின் பள்ளியில் நடந்த யோகா விழாவில், மிகவும் கடினமான, யோகாசனமாக கருதப்படும், கண்டபேருண்டாசனத்தை செய்தார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக, கர்நாடக யோகாசன விளையாட்டு சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே யோகா நிபுணர் ரிஷா தான். தேசிய அளவிலான போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், டில்லி, ஹரியானாவில் யோகாசன பாரத் அமைப்பிடம் இருந்து சிறப்பு பயிற்சி பெற்று, ஆமதாபாதில் நடந்த, சர்வதேச யோகாசன போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார்.
ரிஷாவின் தந்தை ராகவேந்திர ஷெட்டி கூறுகையில், ''என் மகள், 8 வயதில் இருந்தே யோகா பயிற்சி செய்த வருகிறாள். அவளுடைய குருவின் வழிகாட்டுதலாலும், அவளது ஒழுக்கமான கடின உழைப்பாலும், அவள் இன்று உலக அளவில் தங்கம் வென்றுள்ளாள். எங்கள் மகளின் சாதனைகள் எங்களுக்கு அளவற்ற பெருமையை தந்துள்ளன,'' என்றார்.
