'லிட்டர் ஸ்டார், ஏகலவ்யா' விருது 10ம் வகுப்பு பள்ளி மாணவி அசத்தல்
'லிட்டர் ஸ்டார், ஏகலவ்யா' விருது 10ம் வகுப்பு பள்ளி மாணவி அசத்தல்
ADDED : மே 15, 2025 11:28 PM

இந்திய ஸ்கவுட்ஸ் மற்றும் கைட்ஸ் துறையில் சாதனை செய்த, பத்தாம் வகுப்பு மாணவி தன்யா 'லிட்டில் ஸ்டார்' பட்டத்துடன், 'ஏகலவ்யா' விருது பெற்றுள்ளார்.
ஹாசன் மாவட்டம், ஹளேபீடு அருகில் உள்ள ராமனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேணுமூர்த்தி. இவரது மனைவி ஹேமாவதி. இத்தம்பதியின் மகள் தன்யா, 15, பத்தாம் வகுப்பு படிக்கிறார். சிறுமிக்கு சிறு வயதில் இருந்தே, விளையாட்டில் ஆர்வம் அதிகம். அது மட்டுமின்றி விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய பாதுகாப்பில் ஈடுபாடு உள்ளவர்.
இரண்டாம் வகுப்பில் இருந்தே, ஸ்கவுட்ஸ் கைட்ஸ் துறையில் ஈடுபடுகிறார். இதில் சாதனையும் செய்துள்ளார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, ஹாசன் மாவட்டத்தின் சிறப்பு குறித்து உரையாற்றியுள்ளார். பேலுார், ஹளேபீடுவின் சிறப்பம்சங்களை, வெளிமாவட்டங்கள், மாநிலத்தவருக்கு விவரித்துள்ளார்.
இப்பகுதியில் அணியும் உடைகள், சம்பிரதாயங்களை பற்றி உரையாற்றியுள்ளார். தன் அனுபவங்களை ஆகாஷ் வாணியில் பகிர்ந்து கொண்டார். ஸ்கவுட்ஸ் அண்டு கைட்ஸ் துறையில் இவரது சாதனைக்காக, 'லிட்டில் ஸ்டார்' பட்டத்துடன் 'ஏகலவ்யா' விருது பெற்றுள்ளார். சமீபத்தில் ஹாசனின் அம்பேத்கர் பவனில் நடந்த பூமி தினம் மற்றும் ஏகலவ்யா முக்ததளா அமைப்பின் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில், தன்யாவுக்கு விருது வழங்கப்பட்டது.
தன்யா விருது பெறுவது, இதுவே முதன் முறையல்ல. 2020ல் 'ஜனாதிபதி புல்புல்' விருது பெற்றுள்ளார். பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் அவரது திறமையை அடையாளம் கண்டு கவுரவித்தன. விளையாட்டில் மட்டுமல்ல, படிப்பிலும் சூட்டிகையாக இருக்கிறார். இவர் தங்கள் பள்ளிக்கு பெருமை சேர்ப்பதாக, ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்
. - நமது நிருபர் -