மஹாராஜா, மஹாராணி கிரிக்கெட் போட்டி: மைசூரு வாரியர்ஸ் சார்பில் திறமை தேர்வு
மஹாராஜா, மஹாராணி கிரிக்கெட் போட்டி: மைசூரு வாரியர்ஸ் சார்பில் திறமை தேர்வு
ADDED : ஜூலை 31, 2025 11:07 PM

ஆக., 11 முதல் நடக்கும் மஹாராஜா கிரிக்கெட் டி 20 மற்றும் ஆக., 4 முதல் நடக்கும் மஹாராணி கிரிக்கெட் டி 20 போட்டியில் 'மைசூரு வாரியர்ஸ்' அணி சார்பில் திறமையானவர்களை தேர்வு செய்யும் முகாமல் மைசூரில் நடந்தது.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில், 'மஹாராஜா கிரிக்கெட் டி 20 போட்டி' ஆக., 11 முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், மைசூரு வாரியர்ஸ், குல்பர்கா மிஸ்டிக்ஸ், ஷிவமொக்கா லயன்ஸ், ஹூப்பள்ளி டைகர்ஸ், மங்களூரு டிராகன்ஸ் என, ஆறு அணிகள் போட்டியிடுகின்றன.
இதில், அந்தந்த அணிக்கான வீரர்கள் கடந்த மாதம் நடந்த ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இப்போட்டியில் கூடுதலாக, திறமையான வீரர்களை தேர்வு செய்ய, மைசூரு வாரியர்ஸ் அணி முடிவு செய்தது. இதன் அடிப்படையில், மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் இருந்து 31 பேட்ஸ்மேன்கள், 53 வேகப்பந்து வீச்சாளர்கள், 40 சுழற் பந்து வீச்சாளர்கள், 50 ஆல் ரவுண்டர்கள், 10 விக்கெட் கீப்பர்கள் என, 184 பேர் பங்கேற்றனர்.
இதில் நேற்று முன்தினம் நடந்த 'திறமை தேர்வு' முகாமில், மனோஜ் குமார், தக் ஷத், விகாஸ் கவுடா, ஹிமேஸ், சுவயம் ராஜே அர்ஸ், கவுதம் சாகர், ஜெயந்த், ரிதேஷ், நிகில் கவுரவ் என பத்து பேர் தேர்வாகினர். இவர்களில் இருவர், மைசூரு வாரியர்ஸ் அணியில் இடம்பிடிக்க உள்ளனர். இதற்கான இறுதி அறிவிப்பு வரும் 3ல் நடக்கிறது.
மைசூரு வார்யர்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் முரளி, உதவி பயிற்சியாளர் விஜய் மத்யல்கர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
அதுபோன்று, ஆக., 4 முதல் 10 ம் தேதி வரை மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான திறமை தேர்வு முகாம் நடந்தது. இதில், 250 மாணவியர் பங்கேற்றனர். இவர்களின் பெயர்களும் வரும் 3ம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணி மேலாளர் சுரேஷ் கூறுகையில், ''திறமை தேர்வு முகாமில் பங்கேற்ற வீரர்களுக்கு, இறுதி அறிவிப்பு வரும் வரை பயிற்சி அளிக்கப்படும். இதில் சிறப்பாக செயல்படுபவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டு, அணிக்காக விளையாடுவர்,'' என்றார்
- நமது நிருபர் -.