ADDED : மே 21, 2026 10:10 PM

- நமது நிருபர் -
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்து விட்டது. இம்மாதம், 31ம் தேதி இறுதி போட்டி நடக்கிறது.
ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் கே.கே.ஆர். எனும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற முடியாததால், பிளே ஆப் விளையாட முடியவில்லை. ஆனாலும் இந்த அணியில் இடம் பிடித்து உள்ள, கர்நாடக வீரர் மனீஷ் பாண்டே புதிய சாதனையை படைத்து உள்ளார்.
அதாவது, 2008 ம் ஆண்டு துவங்கிய ஐ.பி.எல்., இதுவரை 19 சீசன்களை சந்தித்து உள்ளது. பல அணிகளுக்காக மனீஷ் பாண்டே விளையாடினாலும், அனைத்து சீசன்களிலும் பேட்டிங் செய்த 3 வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்து உள்ளார்.
ஆர்.சி.பி., அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர், அனைத்து சீசன்களில் பேட்டிங் செய்த வீரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.
புதிய சாதனை படைத்து உள்ள மனீஷ் பாண்டே, 2008 ல் ஆர்.சி.பி., அணிக்காக விளையாடிய போது சதம் அடித்தார். ஐ.பி.எல்., போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையும் அவருக்கு உள்ளது.
நேற்று முன்தினம் கூட, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற வைத்ததும் மனீஷ் பாண்டே தான். அவர், 33 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.
