இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவேன் மைசூரு வீரர் நிகின் ஜோஸ் நம்பிக்கை
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவேன் மைசூரு வீரர் நிகின் ஜோஸ் நம்பிக்கை
ADDED : ஏப் 10, 2026 04:09 AM

- நமது நிருபர் -
இந்திய கிரிக்கெட் அணிக்காக, கர்நாடகாவில் இருந்து வெங்கடேஷ் பிரசாத், ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் உள்ளிட்ட வீரர்கள் விளையாடி உள்ளனர். தற்போது ராகுல், பிரசித் கிருஷ்ணா உட்பட சில வீரர்கள் அணியில் இருக்கின்றனர். அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக கண்டிப்பாக விளையாடுவேன் என, நம்பிக்கை தெரிவித்து உள்ளார், 25 வயது இளம் வீரர்.
மைசூரில் பிறந்த அந்த வீரரின் பெயர் நிகின் ஜோஸ். பள்ளியில் படிக்கும் போதே, சிறப்பாக கிரிக்கெட் விளையாடியதால், 15 வயதாக இருந்த போதே, கர்நாடகா பிரிமியர் லீக்கில் மைசூரு வாரியர்ஸ் அணிக்காக விளையாட, 2015ல் வாய்ப்பு கிடைத்தது.
அங்கும் தன் திறமையை வெளிப்படுத்தினார்.
இதனால், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கர்நாடக அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. தொடர்ந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 2022ல் கர்நாடக சீனியர் அணியிலும் இடம் கிடைத்தது.
வலது கை பேட்ஸ்மேனான இவர், 2022ல் இருந்து தற்போது வரை, 25 முதல் தர போட்டிகளில் விளையாடி 1,094 ரன்கள் எடுத்து உள்ளார். சராசரி 33.1. இங்கு இரண்டு சதம் அடித்து உள்ளார்.
லிஸ்ட் ஏ வில், 31 போட்டிகள் விளையாடி 999 ரன்கள் எடுத்து உள்ளார். இங்கு ஒரு சதம் அடித்து இருக்கிறார். விஜய் ஹசாரே, இந்திய ஏ அணிக்காகவும் வாய்ப்பு கிடைக்கும் போது விளையாடுகிறார்.
முதல் தர, லிஸ்ட் ஏ போட்டிகளில் சிறப்பாக விளையாடி, இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ள நிகின் ஜோஸ், அதை தன் இலக்காகவும் நிர்ணயித்து உள்ளார்.
