போலீசான பின்னரும் கபடியில் மைசூரின் சுஷ்மிதா பவார் 'சடுகுடு'
போலீசான பின்னரும் கபடியில் மைசூரின் சுஷ்மிதா பவார் 'சடுகுடு'
ADDED : ஜூலை 10, 2025 11:15 PM

தேசிய அளவில் கபடி போட்டியில் பங்கேற்று, மாநிலத்துக்கு பெருமை சேர்த்த மைசூரின் சுஷ்மிதா பவார், மக்களுக்கு சேவை செய்யும் வகையில் போலீசிலும் பணியாற்றி வருகிறார்.
விளையாட்டுகளிலேயே கஷ்டமான விளையாட்டு கபடி தான். நம் நாட்டில் தோன்றிய இப்போட்டியில், உலகளவில் ஆண்கள், பெண்கள் பிரிவில் நம் வீரர்கள் கோலோச்சி வருகின்றனர்.
இத்தகைய விளையாட்டில், தெற்கு ஆசிய விளையாட்டு, ஆசிய விளையாட்டு, உலக கோப்பையிலும் விளையாடிய இந்திய அணியில் இடம் பெற்றவர் சுஷ்மிதா பவார்.
மாவு அரைத்தல்
மைசூரு நகரின் என்.ஆர்., மொஹல்லாவை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் ராவ் பவார், மாவு அரைக்கும் தொழில் செய்து வந்தார்; மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவரது மனைவி மஞ்சுளா பாய்; மகள் சுஷ்மிதா பவார்.
பள்ளியில் படித்தபோது, தடகள வீராங்கனையாக ஜொலித்தார். மைசூரு பீப்பிள்ஸ் பார்க் அரசு பெண்கள் கல்லுாரியில் பி.யு.சி., படித்து வந்தார். கல்லுாரிகளுக்கு இடையேயான கபடி போட்டியில் விளையாட, இக்கல்லுாரியில் ஆள்பற்றாக்குறை இருந்தது.
கல்லுாரியில் 2003 ல் தடகள பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுஷ்மிதா பவாரை கபடி வீராங்கனைகளும், பயிற்சியாளரும் பார்த்தனர். அவரிடம் பேசிய பயிற்சியாளர், 'கபடியில் எதிரணி வீரர்களை தொட்டு விட்டு வந்தால் போதும்' என்று ஆசை வார்த்தை கூறினார்; அவரும் சரி என்றார். ஆனால், அவரோ, தன் வாழ்நாளில் கபடி விளையாடியது கூட கிடையாது.
போலீஸ் ஏட்டு
அன்று முதல் தடகள பயிற்சியுடன் கபடி பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். தடகள போட்டியில் போதிய ஆதரவு கிடைக்காததால், தன் கவனத்தை கபடி மீது செலுத்தினார். அவரின் முயற்சி வீண் போகவில்லை. 2005 ல் விளையாட்டு பிரிவில், கர்நாடகா போலீசில் ஏட்டாக பதவியேற்றார்.
உயர் அதிகாரிகளின் ஆதரவுடன், தொடர்ந்து கபடி பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். கர்நாடக ஜூனியர் கபடி அணியின் கேப்டன், தெற்கு மண்டலம், கர்நாடக சீனியர் அணியின் உறுப்பினராக இருந்தார். 2014 ல் இந்திய அணிக்கு தேர்வானார். பல போட்டிகளில் விளையாடி, அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்தார்.
இவரின் சேவையை பாராட்டி 'ஏகலவ்யா', 'கெம்பே கவுடா' என பல விருதுகளை பெற்றார்.
தன் சாதனைக்கு பெற்றோரும், கணவரும், போலீஸ் துறையுமே காரணம். இவரது கணவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர்களுக்கு மகள் உள்ளார்.
- நமது நிருபர் -