தடகள வீராங்கனையாகவும் அசத்தும் தொழில் முனைவோர் நிருபா சங்கர்
தடகள வீராங்கனையாகவும் அசத்தும் தொழில் முனைவோர் நிருபா சங்கர்
ADDED : மே 30, 2025 06:22 AM

பெண்கள் நினைத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. ஒரு காலத்தில் வீட்டை மட்டும் கவனித்து கொண்டு, வெளி உலகமே தெரியாமல் இருந்த பெண்கள், தற்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர்.
இவர்களில் ஒருவர் பெங்களூரின் நிருபா சங்கர். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரிகேட் ரியல் எஸ்டேட் குரூப் நிறுவனர் ஜெய்சங்கரின் மகள் ஆவார். தற்போது நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனராகவும் உள்ளார். சிறந்த தொழில் முனைவோர் என்று பெயர் எடுத்த நிருபா சங்கர், விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறார்.
திருமணமாகி முதல் குழந்தை பிறந்த பின் கடந்த 2015ல் ஓட்ட பயிற்சியை துவங்கினார். ஓட்டப்பந்தய வீரர்கள் சங்கத்திலும் சேர்ந்து மாரத்தான், டிரையத்லான் போட்டிகளிலும் பங்கேற்க ஆரம்பித்தார். கடந்த 2021ல் குரேஷியாவில் நடந்த குறுகிய துார டிரையத்லான் போட்டியில் பங்கேற்றார். கடந்த 2023 ம் ஆண்டு டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடந்த டிரையத்லான் போட்டிகளில் பங்கேற்றார்.
அந்த போட்டியில் 3.8 கி.மீ., துாரம் நீச்சல்; 180 கி.மீ., துாரம் சைக்கிள் சவாரி; 42.2 கி.மீ., துார மாரத்தானில் பங்கேற்றார். அந்த ஆண்டில் டிரையத்லானில் இந்தியாவில் இருந்து பங்கேற்ற முதல் பெண் என்ற பெயரும் பெற்றோர்.
'அயர்ன்மேன்' போட்டிகளில் தனது முதல் முயற்சியிலேயே 14 மணி நேரம் 47 நிமிடம் 41 வினாடிகளில் வெற்றி கோட்டை அடைந்தார். கடந்த ஆண்டு, 'பிசினஸ் டுடே'யின் சக்தி வாய்ந்த, பெண் பட்டியலில் இடம்பிடித்து அசத்தினார். தொழில், விளையாட்டு இரண்டையும் சமமாக பார்க்கிறார்
- நமது நிருபர் -.