பழங்குடியின சமூக இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிக்கும் நிதிஷ்
பழங்குடியின சமூக இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிக்கும் நிதிஷ்
ADDED : ஜூலை 24, 2025 11:27 PM

பொதுவாக நகர்ப்புறங்களில் வசிக்கும் விளையாட்டு வீரர்கள், வெளி உலகிற்கு எளிதில் அடையாளம் காணப்படுவர்.
ஆனால் கிராமப்புற விளையாட்டு வீரர்களின் திறமை, எளிதில் வெளி உலகிற்கு தெரிவது இல்லை. அவர்கள் தங்கள் திறமையை வெளி காட்டுவதற்கே பல தடைகள், சவால்களை கடந்து வர வேண்டி உள்ளது.
அதிலும் கிராம பகுதிகளில் வசிக்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்தின் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு, அங்கீகாரம் கிடைக்க வைப்பது பெரும் சவாலாக உள்ளது.
திறமையான விளையாட்டு வீரர்களை, உலகிற்கு அடையாளம் காண வைப்பதற்கு ஒரு சிலர் மட்டுமே முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இவர்களில் ஒருவர் நிதிஷ் சினிவார்.
உத்தர கன்னடா மாவட்டத்தின் கார்வாரை சேர்ந்தவர். சித்தி பழங்குடியின சமூக இளைஞர்களை, விளையாட்டில் ஊக்குவித்து வருகிறார்.
இதுகுறித்து நிதிஷ் சினிவார் கூறியதாவது:
உத்தர கன்னடா மாவட்டத்தின் எல்லாபூர், ஹலியால், அங்கோலா, ஜோய்டா, முண்டகோடு, சிர்சி; பெலகாவியின் கானாபூர்; தார்வாட்டின் கல்கட்டகி பகுதியில் ஏராளமான சித்தி பழங்குடியின சமூகத்தினர் வசிக்கின்றனர்.
இந்த சமூகத்தில் திறமையான விளையாட்டு வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் அவர்கள் தங்கள் திறமையை வெளியே கொண்டு வர, யாராவது ஒருவரின் உதவியை தேடுகின்றனர்.
நான், இங்கிலாந்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பொறியியலில் முதுகலை பட்டம் பெற்ற பின், சொந்த ஊருக்கு வந்தேன். எனது நண்பர் ஒருவர் மூலம், சித்தி சமூக விளையாட்டு வீரர்கள் பற்றி தெரிந்தது.
அவர்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும் வகையில், 'பிரிட்ஜஸ் ஆப் ஸ்போர்ட்ஸ்' என்ற பெயரில் அறக்கட்டளை துவக்கினேன்.
இந்த அறக்கட்டளை மூலம் சித்தி சமூகத்தின் விளையாட்டு வீரர்களுக்கு கூடுதல் பயிற்சி அளித்ததுடன், மாவட்ட, மாநில அளவில் நடக்கும் பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வைத்தோம். வீரர்களில் 95 சதவீதம் பேர் தடகள போட்டிகளில் சிறப்பாக செயல்பட கூடியவர்கள்.
எனது அறக்கட்டளை மூலம் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட வீரர்கள் ஏராளமான பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர்.
வெளி உலகிற்கும் அடையாளம் காட்டப்பட்டு உள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் நிறைய வீரர்களை உருவாக்க திட்டமிட்டு உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -