டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சாதிக்க துடிக்கும் பிரசித் கிருஷ்ணா
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சாதிக்க துடிக்கும் பிரசித் கிருஷ்ணா
ADDED : மே 21, 2026 10:09 PM

-நமது நிருபர் -: கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்தவர் பிரசித் கிருஷ்ணா, 30. இவரது தந்தை முரளி, கிரிக்கெட் வீரர். தாய் கலாவதி கைப்பந்து வீராங்கனை. சிறு வயதிலிருந்தே கிருஷ்ணாவுக்கு விளையாட்டு மீது ஆர்வம் அதிகம். தந்தை வழியில் கிரிக்கெட்டை தேர்வு செய்வதா அல்லது தாய் வழியில் கைப்பந்தை தேர்வு செய்வதா என்ற குழப்பத்தில் இருந்தார்.
பள்ளியில் படிக்கும் போது சக மாணவர்களை விட மிகவும் உயரமாக இருந்தார். கிரிக்கெட்டில் வேகமாக பந்து வீசினார். இதை கவனித்த அவரது பயிற்சியாளர், கிருஷ்ணாவுக்கு கிரிக்கெட்டில் பெரிய எதிர்காலம் இருப்பதை கண்டறிந்தார். இதன் பின், கிரிக்கெட்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட துவங்கினார். வேகப்பந்து வீச்சாளராக மாறுவதற்கான அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்டார்.
எம்.ஆர்.எப்., அறக்கட்டளை
இதன் விளைவாக, 2015 - 2016ம் ஆண்டிற்கான கர்நாடகா அணிக்கான முதல் தர கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இரண்டு ஆண்டுகளுக்கு பின், சென்னையின் எம்.ஆர்.எப்., அறக்கட்டளைக்காக விளையாடினார்.
முதல் போட்டியில் அசத்தல் இச்சமயத்தில், வேகப்பந்து வீசுவதில் கைதேர்ந்தவராக உருமாறினார். விஜய் ஹசாரே டிராபியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் 2018ல் கொல்கட்டா அணிக்கு விளையாட தேர்வு செய்யப்பட்டார். மும்பை அணிக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசி, அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக பந்துவீசினார்.
இவர் தனது உயரத்தை பயன்படுத்தி, 135 முதல், 145 கி.மீ., வேகத்தில் பந்து வீசி, பேட்ஸ்மேன்களை திணறடித்தார். இதனால், 2021ல் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். கடந்த, 2021 மார்ச்சில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். தனது முதல் போட்டியிலேயே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக சாதித்தார். இதனால், 50 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்து கொண்டார். இவர், 2023ல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 20 ஓவர்கள் பந்து வீசினார். 93 ரன்கள் விட்டுக்கொடுத்து, ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.
இதனால், டெஸ்ட் போட்டியில் அவருக்கான வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை. எப்படியாவது டெஸ்ட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்தார்.
இந்நிலையில், அடுத்த மாதம் இந்தியாவில் நடக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதை அவர் பயன்படுத்திக் கொள்ள காத்து கொண்டிருக்கிறார். சிவப்பு பந்தில் எப்படியாவது தனது திறமையை காட்ட ஆவலோடு காத்திருக்கிறார். இதற்காக தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளார்.
தனது உயரத்தை பயன்படுத்தி, வேகப்பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை திணறடிக்க காத்து கொண்டிருக்கிறார்.
இவரின் பந்துகளில் சிக்கும் பேட்ஸ்மேன்களின் நிலை என்னவாகும் என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!
