ஆர்.சி.பி., - சன்ரைசஸ் போட்டி டிக்கெட்டுகள் 110 சதவீதம் கட்டணம் உயர்வு
ஆர்.சி.பி., - சன்ரைசஸ் போட்டி டிக்கெட்டுகள் 110 சதவீதம் கட்டணம் உயர்வு
ADDED : மே 21, 2026 10:09 PM

- நமது நிருபர் -: இந்தியன் பிரீமியர் லீக், 2026ன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றான, ஆர்.சி.பி., - சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் டிக்கெட், 50 முதல், 110 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளன.
இந்தாண்டின் ஐ.பி.எல்., போட்டியில் ஆர்.சி.பி., - சன்ரைசஸ் ஹைதராபாத் இடையே இன்று, ஆந்திராவின் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி சர்வதேச மைதானத்தில் போட்டி நடக்கிறது.
கோலி ஓய்வு இப்போட்டியை காண ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில், டெஸ்ட், டி 20 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டார்.
தற்போது, ஐ.பி.எல்., போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இதனால் அவரை நேரில் காண வேண்டும் என்ற வாய்ப்பு ரசிகர்களுக்கு அரிதாகிவிட்டது.
இந்த காரணத்தால், இப்போட்டியை முக்கிய நிகழ்வாக கருதியுள்ள, எஸ்.ஆர்.எச்., எனும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம், டிக்கெட் விலையை கணிசமாக உயர்த்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விராட் கோலியின் பிரபலம், டிக்கெட்டுக்கான தேவையை அதிகரித்து உள்ளது.
இதனால், ராஜிவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், மேல் அடுக்கு ஸ்டாண்ட் டிக்கெட்டுகள், 900 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாய்; தெற்கு முதல் டெரஸ் டிக்கெட்டுகள் 1,500 ரூபாயில் இருந்து 3,000 ரூபாய்; நடுத்தர அடுக்கு பொது ஸ்டாண்ட் 1,910 ரூபாயில் இருந்து 3,500 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும், பிரிமியம் ஸ்டாண்ட் டிக்கெட்டுகள் 2,500 ரூபாயில் இருந்து, 4,500 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளன. இது தவிர, கார்ப்பரேட் ஹாஸ்பிடாலிட்டி பாக்ஸ்களின் விலை, 30 ஆயிரம் ரூபாயில் இருந்து, 45 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
சோமோட்டோ வழங்கும் 'டிஸ்ட்ரிக்ட்' நிறுவனத்தால், டிக்கெட் விற்பனை அதிகாரபூர்வமாக நடத்தப்பட்டது. அனைத்து டிக்கெட்களும் சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்தன.
அப்போதும் கூட, 2.16 லட்சத்துக்கும் அதிகமானோர், ஆன்லைனில் டிக்கெட் பெற காத்திருந்தனர். ஆனால், அவர்களால் டிக்கெட் வாங்க முடியவில்லை.
ரசிகர்கள் எதிர்ப்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு நெட்டிசன்கள், கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் கூட, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி டிக்கெட்கள், கள்ளசந்தையில் அதிக தொகைக்கு விற்பனையானது தெரிந்தது. வழக்கமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தான், மார்க்கெட்டில் தங்கள் பொருட்களின் தேவையை அறிந்து விலையை உயர்த்துவர். அதுபோல, எஸ்.ஆர்.எச்., நிறுவனமோ, ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல டிக்கெட் விலையை உயர்த்தி இருப்பது, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் சுமையாக மாறி உள்ளது.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஐ.பி.எல்., போட்டிகள், தற்போது கனவிலும் எண்ணிப்பார்க்க முடியாத அளவில், ஆடம்பரமான கிரிக்கெட்டாக மாறி உள்ளது. குடும்பத்தினருடன் போட்டியை காண விரும்புவோருக்கு இது பெரும் சுமையாக மாறி உள்ளது!
---------------------------------
படவிளக்கம்
22_Article_0001
ஐ.பி.எல்., போட்டிகளில், கடந்த ஆறு ஆண்டுகளில் ஆர்.சி.பி., - எஸ்.ஆர்.எச்., அணிகளின் நிலை.
