ஆர்.சி.பி., அணியின் பெயர் மாற்றம் இல்லை புதிய நிர்வாகம் அறிவிப்பு
ஆர்.சி.பி., அணியின் பெயர் மாற்றம் இல்லை புதிய நிர்வாகம் அறிவிப்பு
ADDED : மார் 27, 2026 05:25 AM

- நமது நிருபர் -:
ஆர்.சி.பி., அணி பெயரில் மாற்றம் இல்லை என்று, அணியை விலைக்கு வாங்கிய புதிய நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால், ரசிகர்கள் குஷி அடைந்து உள்ளனர்.
ஐ.பி.எல்., என்ற, இந்தியன் பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டிகள் வரும், 28 ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் துவங்குகின்றன.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி., எனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.
ஆர்.பி.சி., அணிக்கு இதுவரை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம் நிர்வாகமாக இருந்தது. தற்போது ஆர்.சி.பி., அணியை ஆதித்யா பிர்லா குழுமம் 16,706 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது.
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவன முன்னாள் தலைவரான விஜய் மல்லையா, ராயல் சேலஞ்ச் பிராண்ட் விஸ்கியை விளம்பரத்தும் விதமாக, ராயல் சேலஞ்ச் என்று பெயர் வைத்தார்.
அந்த பெயருக்கு பின் பெங்களூரை சேர்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று மாற்றியது. இந்த பெயர் ரசிகர்களுடன் உணர்வுபூர்வமாகவும் பிணைந்து விட்டது.
புதிய உரிமையாளர்கள் ஆர்.சி.பி., பெயரை மாற்றி விடுவர் என்று, சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. தங்கள் உணர்வுபூர்வமான பெயரை மாற்ற வேண்டாம் என்று ரசிகர்களும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், ஆர்.சி.பி., அணி உரிமையாளர்களில் ஒருவரான அனன்யா பிர்லா, ஆர்.சி.பி., அணியின் பெயர் மாறாது என்று, இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டசில் பதிவிட்டு உள்ளார்.
இதனால், ரசிகர்கள் குஷி அடைந்து உள்ளனர். கடந்த முறை போன்று இம்முறையும் ஆர்.சி.பி., சாம்பியன் பட்டம் வெல்லும் என்று கூறி வருகின்றனர்.
