எச்.ஐ.வி., பாதித்த மாணவ - மாணவியருக்கு விளையாட்டு பயிற்சி
எச்.ஐ.வி., பாதித்த மாணவ - மாணவியருக்கு விளையாட்டு பயிற்சி
ADDED : ஜூலை 31, 2025 11:06 PM

விளையாட்டில் திறமையான மாணவ - மாணவியருக்கு பயிற்சி அளிக்க பல விளையாட்டு அகாடமிகள், அமைப்புகள் உள்ளன. ஆனால், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட மாணவ - மாணவியருக்கென, பெங்களூரை சேர்ந்த மாநில அளவிலான முன்னாள் தடகள வீரர் ஒருவர், விளையாட்டு பவுண்டேஷன் நடத்தி வருகிறார்.
பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லுாரியில் படித்த எல்விஸ் ஜோசப், மாநில அளவில் பல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். விளையாட்டின்போது ஏற்பட்ட காயத்தால், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது.
ஆனால், வேறு எந்த துறைக்கும் செல்லாமல், அமெரிக்காவுக்கு சென்ற அவர், வேலை பார்த்தபடி, 'விளையாட்டு நிர்வாகம்' தொடர்பாக படித்து பட்டம் பெற்றார். பெங்களூரு வந்த அவர், எச்.ஐ.வி., பாதித்த மாணவ - மாணவியருக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கும் பவுண்டேஷனை நிறுவினார்.
இதுதொடர்பாக, எல்விஸ் ஜோசப் கூறியதாவது:
பெரும்பாலான பள்ளிகள் விளையாட்டை ஒரு தொழில்முறை நடவடிக்கையாக கருதால், பொழுதுபோக்கு நடவடிக்கையாக கருதின. குழந்தைகள் விளையாடினாலும், விளையாடா விட்டாலும், பள்ளிகள் அதற்கான கட்டணத்தை வசூலிக்கின்றன.
எனவே, குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில், 2009ல் பி.எஸ்.எஸ்.எப்., எனும் பெங்களூரு பள்ளி விளையாட்டு பவுண்டேஷன் அமைப்பை துவக்கினேன்.
எச்.ஐ.வி., பற்றி பேசும் உலகில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த தீர்வுகளும் கிடைக்கவில்லை. ஒன்று மருந்துகளை உட்கொள்கின்றனர் அல்லது சமூகத்தினரால் புறக்கணிக்கப்டுகின்றனர்.
எனவே, என் முதல் திட்டமாக எச்.ஐ.வி., பாதித்த குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்பது, என் நோக்கமாக இருந்தது. ஆரம்பத்தில் 20 குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க துவங்கினேன். இதன் மூலம் தங்களின் திறமையை அடையாளப்படுத்திக் கொள்ளவும், சுதந்திரமாக வாழவும் வாய்ப்பு ஏற்படும். தற்போது மாநிலத்தில், 2,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பத்து லட்சம் குழந்தைகள், இளைஞர்களின் திறமையை கண்டுபிடித்து, அவர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்தி இந்திய அரசுக்கும், யுனெஸ்கோவுக்கும் அடையாளம் காட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டமாகும்.
நெதர்லாந்தில் 2015ல் நடந்த சர்வதேச குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், 60 நாடுகளை சேர்ந்த குழந்தைகள் பங்கேற்றனர். இதில், எங்கள் பவுண்டேஷனில் பயிற்சி பெற்ற எச்.ஐ.வி., பாதித்த பாபு சேனப்பா, 14, மானிக் பிரபு, 14, ஆகியோர் பங்கேற்றனர். மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட பல விளையாட்டு வீரர்கள், தாமாக முன்வந்து பயிற்சி அளிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் விபரங்களுக்கு www.bssfindia.org என்ற இணையதளத்திலும், 99022 47755 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
- நமது நிருபர் - .