சுப்ரதோ கால்பந்து போட்டி: மேற்கு வங்க அணி சாம்பியன்
சுப்ரதோ கால்பந்து போட்டி: மேற்கு வங்க அணி சாம்பியன்
ADDED : செப் 11, 2026 02:12 AM

- நமது நிருபர் -
இந்தியாவின் முதல் விமான படை தளபதியான ஏர் மார்ஷல் சுப்ரதோ முகர்ஜியின் நினைவாக, இந்திய விமானப்படை சார்பில், ஆண்டிற்கு ஒரு முறை, 15 வயதுக்கு உட்பட்டோருக்கான, சுப்ரதோ கோப்பை சர்வதேச கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.
அதன்படி, 65வது கால்பந்து போட்டிகள், கடந்த 3ம் தேதி பெங்களூரு ஜாலஹள்ளியில் உள்ள விமானப்படை மைதானத்தில் துவங்கியது. இலங்கை, வங்கதேசம் என சர்வதேச அணிகள், இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவை என, 32 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று, அரையிறுதி போட்டிகள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் இறுதி போட்டி நடந்தது.
மேற்கு வங்கத்தின் மாணிக்பாரா விவேகானந்தா வித்யா பீடம், அசாமின் காம்ரூப் மெட்ரோபாலிட்டன் சீனியர் செகண்டரி அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த போட்டியில், 1 - 0 என்ற கோல் கணக்கில் மேற்கு வங்க அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு நான்கு லட்சம் ரூபாய்; இரண்டாம் இடம் பிடித்த அசாம் அணிக்கு இரண்டு லட்சம் ரூபாயும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அசாம் அணியின் ராஜீ டிங்சோங் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 50,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில், பயிற்சி பிரிவு தலைமை தளபதி ஏர் மார்ஷல் சீனிவாஸ் தலைமை விருந்தினராக பங்கேற்றார். முன்னாள் சர்வதேச கால்பந்து வீரர் சண்முகம் வெங்கடேஷ், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு வாழ்த்து கூறினார்.
