சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கூடுதலாக 20,000 இருக்கைகள் அமைக்க டெண்டர் வெளியீடு
சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கூடுதலாக 20,000 இருக்கைகள் அமைக்க டெண்டர் வெளியீடு
ADDED : ஏப் 10, 2026 04:11 AM

- நமது நிருபர் -
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள பார்வையாளர் இருக்கைகளை, 34 ஆயிரத்தில் இருந்து, 54 ஆயிரமாக அதிகரிக்க, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் டெண்டர் வெளியிட்டுள்ளது.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானம், 1974ல் கட்டப்பட்டது. 2024ல், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கடந்தாண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மோசமான நாளாக அமைந்தது.
அதன்பின், இங்கு கிரிக்கெட் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடந்த கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு பின், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் என பலரை வெங்கடேஷ் பிரசாத் பலமுறை சந்தித்து, சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மீண்டும் போட்டிகள் நடத்துவது குறித்து பேச்சு நடத்தினார்.
இதையடுத்து, ஆய்வு குழுவினர் மைதானத்தை ஆய்வு செய்து, சில ஆலோசனைகளை வழங்கினர். அதை ஏற்ற கே.எஸ்.சி.ஏ., நிர்வாகம், செய்து முடித்தது. இதனை ஆய்வு செய்த ஆய்வு குழுவினர், அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சரவையில் விவாதித்து, போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து துணை முதல்வர் சிவகுமாரை, வெங்கடேஷ் பிரசாத் தலைமையிலான சங்கத்தினர் சந்தித்து, மைதானம் புனரமைப்பு திட்டம் குறித்து விவாதித்தனர்.
திட்டத்தின் அம்சங்கள்: விளையாட்டு மைதா னம் மறு வடிவமைப்பு
கூடுதலாக 20 ஆயிரம் பார்வையாளர் இருக்கைகள் அமைப்பது
பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள்
கூட்ட கட்டுப்பாட்டு அமைப்பு
நல்ல வாகன நிறுத்தும் இடம் வசதி
போக்குவரத்து மேலாண் மை அமைப்பு மேம்பாடு ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இது தொடர்பாக வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை:
மைதானம் புனரமைப்பு பணிகளை முடிக்க, நாங்கள் எந்தவொரு குறிப்பிட்ட காலக்கெடும் விதிக்கவில்லை. இது நீண்ட செயல் முறையாகும். டெண்டர் அழைக்க வேண்டும், ஒப்புதல் பெறுவதற்கு பல சுற்று கூட்டம் நடத்த வேண்டும். அதேவேளையில் என் பதவி காலத்துக்குள் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை புனரமைக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.
இத்திட்டம் இருக்கையின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. பார்வையாளர்கள் சிறந்த அனுபவம் பெற, நவீன வசதிகள் ஏற்படுத்துவதே கே.எஸ்.சி.ஏ.,வின் நோக்கம். கடந்த 10 ஆண்டுகளாக இதை பற்றி சந்தித்து வருகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
சின்னசாமி கிரிக்கெட் மைதானம் புனரமைப்பு பணி செய்தி, பெங்களூரு கிரிக்கெட் ரசிகர்களுக்கு நற்செய்தியாகும். ஐ.பி.எல்., மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை அமர்ந்து காணும் மைதானத்தை, சீரமைக்கும் திட்டத்தை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
படம்: சின்னசாமி கிரிக்கெட் மைதானம்
