ADDED : நவ 28, 2025 05:37 AM

கிரிக்கெட் அனைவருக்கும் பிடித்தமான விளையாட்டு. சிறியவர் முதல் மூத்த குடிமக்கள் என பலரும் விரும்பி பார்ப்பர். ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் கூட கிரிக்கெட்டில் சாதனை செய்கின்றனர்.
சமீபத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான, இந்தியா - நேபாளம் இடையே உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இந்திய அணியினர் வெற்றி பெற்று, அபார சாதனை செய்தனர். இந்த அணியை முன்னின்று நடத்தியவர் கேப்டன் தீபிகா. இவர் கர்நாடகாவின் மிகவும் பின்தங்கிய பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர். துமகூரு மாவட்டம், சிரா தாலுகாவின் காடு கொல்லர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
கூலி வேலை இவருக்கு பிறவியிலேயே பார்வை குறைபாடு இருக்கவில்லை. தீபிகாவுக்கு 5 வயதாக இருந்த போது, வலது கண்ணில் நகம் குத்தியதில், பார்வை பறிபோனது. தந்தை சிக்க திம்மப்பா, தாய் சித்தம்மா கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். படிப்பறிவில்லாத தம்பதிக்கு குழந்தையின் நிலைமை புரியவில்லை.
தீபிகா, 12 வயது சிறுமியாக இருந்த போது, மகளுக்கு சிகிச்சையளிக்க பெற்றோர் பணம் இல்லாமல் பரிதவித்தனர்; பலரிடம் கேட்டனர். இவர்களின் நிலைமையை பார்த்து, அக்கம், பக்கத்தினர் தீபிகாவையும், அவரது பெற்றோரையும் கேலி செய்தனர். இதை பார்த்த தீபிகா, மனம் தளரவில்லை. வாழ்க்கையில் சாதிப்பதன் மூலம், இவர்களுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்தார்.
ஆர்வம் தன் சிகிச்சைக்காக, தந்தை படும்பாட்டை கவனித்த மகள், 'எனக்கு ஒரு கண் தெரிகிறது. அது போதும். ஒற்றைக் கண்ணை வைத்தே, நான் ஜெயித்து காட்டுவேன்' என, சவால் விடுத்தார். அதன்பின் பெற்றோர் இவரை குனிகல்லின் தொட்டபானகெரேவில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்தனர். மைசூரின் ரங்கராவ் மேல்நிலைப் பள்ளியில் படித்த போது, தீபிகாவுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்காக பயிற்சியும் பெற்றார்.
பள்ளியின் உடற் பயிற்சி ஆசிரியர்கள் மோகன்குமார், ஹரி ஆகியோரின் உதவியுடன், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். 2019ல் கர்நாடக அணியினர் தேர்வு நடந்தது.
இதற்காக பெங்களூரு செல்ல, அவரிடம் பணம் இல்லை. அப்போது இவருக்கு நல்ல உடைகள் வாங்க, உணவு, தங்கும் வசதிக்கு மோகன்குமார் உதவினார். அதன்பின் பெங்களூருக்கு சென்று, சிறப்பாக விளையாடி கர்நாடக அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கர்நாடக அணியின் மானேஜர் ஷிகா ஷெட்டி, சமர்த்தனம் டிரஸ்ட்டின் மஹாந்தேஷின் ஊக்கத்தால், தற்போது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனையானார். சில நாட்களுக்கு முன் நடந்த இந்தியா - நேபாளம் இடையிலான போட்டியில், அபாரமாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிப்பை அளித்தார்.
தன்னை பற்றி மற்றவர்கள் செய்த கேலி, அவமதிப்புகளையே தன் வெற்றிக்கு படிகளாக மாற்றிக்கொண்ட தீபிகா, மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். தற்போது இவர், வருமான வரித்துறையில் மும்பையில் பணியாற்றுகிறார்
- நமது நிருபர் -.

