தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/ஆடுகளம்/ மாற்றுத்திறனாளிகளுக்கு நீச்சல் பயிற்சி தரும் உமேஷ் கல்கட்கி

 மாற்றுத்திறனாளிகளுக்கு நீச்சல் பயிற்சி தரும் உமேஷ் கல்கட்கி

 மாற்றுத்திறனாளிகளுக்கு நீச்சல் பயிற்சி தரும் உமேஷ் கல்கட்கி


ADDED : பிப் 06, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

பெலகாவியை சேர்ந்த நீச்சல் பயிற்சியாளரால், பல மாற்றுத்திறனாளிகள் சர்வதேச அளவில் சாதனை படைத்து, நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பெலகாவியை சேர்ந்த, 11 வயது சிறுவன் மொயின் ஜுன்னெதி. அரிய வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தடுமாறி கீழே விழுந்தாலே அவரின் எலும்புகள் நொறுங்கி விடும். இவரை பள்ளியில் சேர்க்க, எந்த பள்ளியும் முன்வரவில்லை.

அதனால், 2009ல் பெலகாவி வந்த அப்போதைய முதல்வரை சந்திக்க மொயினின் பெற்றோர் சென்றனர். இவர்கள் செல்வதற்குள் முதல்வர் புறப்பட்டு சென்று விட்டார்.

அப்போது, அங்கிருந்த நீச்சல் பயிற்சியாளர் உமேஷ் கல்கட்கி, அவர்களிடம் பேசினார். அன்று முதல் மொயின் ஜுன்னெதியின் வாழ்க்கை ஏறுமுகமாகவே உள்ளது.

அதிசய சிறுவன் உமேஷ் கல்கட்கி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறந்த நீச்சல் பயிற்சியாளராக உருவெடுத்தார். மொயினுக்கு நீச்சலில் ஆர்வம் உள்ளதை அறிந்த உமேஷ், அவருக்கு பயிற்சி அளித்தார்.

ஒன்றரை அடி உயரமே இருந்த மொயின், மூன்று வாரங்களில் நீச்சலில் தேர்ச்சி பெற்றார். 2010ல் தேசிய அளவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்றார்.

சில ஆண்டுகளில், 'இந்தியாவின் அதிசய சிறுவன்' என்று அழைக்கப்பட்டார். பல தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்ற மொயினுக்கு 28 வயதாகிறது. பி.காம்., முடித்து உள்ளார்.

இவர் மட்டுமல்ல, போலியோவால் இரு கால்கள் பாதிக்கப்பட்ட ராகவேந்திரா அன்வேகர், ஆசிஷ் ஜாதவ், ராஜேஷ் ஷிண்டே, உமேஷ் கடே, சிம்ரன் கவுடல்கர், ஸ்ரீதர் மாலகி, சஹில் ஜாதவ், சுமித் முட்டேகர் என, பலர் பதக்கங்கள் வெல்ல காரணமாக இருந்தவர் உமேஷ் கல்கட்கி.

அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் சர்வதேச, தேசிய அளவில், 60க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளனர்.

உமேஷ் கல்கட்கி, 1985ல் கல்லுாரியில் படிக்கும் போது, தொடர்ந்து பல நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

கல்லுாரி படிப்பை முடித்த அவர், 1987 'ஸ்விம்மர்ஸ் கிளப் பெலகாவி அக்வாரியம் ஸ்விம் கிளப்'ஐ, துவக்கினார். வழக்கம் போல் உடல் பாதிப்புகள் இல்லாத மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க துவங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் சந்திப்பு கடந்த, 2001ல் இவரை ஆறு பேர் கொண்ட மாற்றுத்திறனாளி குழுவினர் சந்தித்தனர். தங்களுக்கும் நீச்சல் பயிற்சி கற்றுத்தரும்படி அவரின் காலில் விழுந்து கேட்டனர். அவரும் பயிற்சி அளித்தார். இந்த ஆறு பேரில், ராகவேந்திரா அன்வேகரும் ஒருவர்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி வகுப்பை துவக்குகிறார்.

இதில், 300 குழந்தைகள் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு, 25 பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இதுவரை 6,000 குழந்தைகள் பயிற்சி பெற்றுள்ளனர்.

இது குறித்து உமேஷ் கல்கட்கி கூறியதாவது:

குழந்தைகளுக்கு முதற்கட்ட நீச்சல் பயிற்சி அளிக்கப்படும். இதில் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு ஆண்டு முழுதும் பயிற்சியை தொடருவோம். இங்கு பயிற்சி பெறுவோருக்கு, நன்கொடை மூலம் வசூலிக்கப்பட்ட பணத்தில், சத்தான பழங்கள், நீச்சல் உடைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது சவாலான விஷயம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு பாதிப்பு இருக்கும். முதலில் பெற்றோர் போன்று மாணவர்களின் நம்பிக்கையை பெறுவோம். பாதுகாப்பாக இருப்பதை உணரும் குழந்தைகள், ஒரு வாரத்திற்குள்ளாகவே நீச்சல் கற்றுக் கொள்வர்.

அதுபோன்று பெற்றோரும் முதலில், தங்கள் குழந்தையை பயிற்சிக்கு அனுப்ப தயங்கினர். நாளடைவில் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தனர்.

இதுபோன்று தான் மொயின் ஜூன்னெதின் தாய் பயந்தார். ஆனால், மொயின், கையில் பதக்கம் வைத்திருப்பதை பார்த்த அவரது தாய், ஆனந்த கண்ணீர் விட்டார். இது எனக்கு மன நிம்மதியை அளித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இவரின் சேவையை பாராட்டி கடந்தாண்டு மாநில அரசு, அவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கவுரவித்தது. அதுபோன்று பல்வேறு அமைப்புகள் அவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து உள்ளன.

பார்வையற்றோருக்கான மகேஸ்வரி பள்ளி தலைமை ஆசிரியை அனிதா காவடே கூறுகையில், ''நீச்சல் பயிற்சி மூலம் எங்கள் குழந்தைகள் தன்னம்பிக்கை அடைந்து உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக, பயிற்சியாளர் உமேஷ் கல்கட்கியிடம், எங்களின் பள்ளி மாணவர்கள் 250 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். பலர் தேசிய அளவில் பத க்கங்களை வென்றுள்ளனர்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us