தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடுகளம்/ சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடக்குமா? அரசின் முடிவுக்கு காத்திருக்கும் கிரிக்கெட் சங்கம்

 சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடக்குமா? அரசின் முடிவுக்கு காத்திருக்கும் கிரிக்கெட் சங்கம்

 சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடக்குமா? அரசின் முடிவுக்கு காத்திருக்கும் கிரிக்கெட் சங்கம்


ADDED : டிச 12, 2025 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2025 06:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது தொடர்பாக, அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வரும், துணை முதல்வரும் நம்பிக்கை அளித்து உள்ளனர்,'' என, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க புதிய தலைவர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார்.

கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தேர்தலில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். இதற்கு முன், முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தலைவராகவும், துணைத்தலைவராக வெங்கடேஷ் பிரசாத், செயலராக ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் இருந்தனர். இவர்களின் காலகட்டத்தில், கர்நாடகாவில் கிரிக்கெட் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.

சவால்கள் நடப்பாண்டு ஜூனில் நடந்த கூட்ட நெரிசல் பலி சம்பவத்துக்கு பின், சின்னசாமி மைதானம் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை இழந்துவிட்டது. மகளிர் உலக கோப்பை போட்டிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன.

ரஞ்சி போட்டி உட்பட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் கூட பெங்களூரில் நடக்காமல், மற்ற மாநிலங்களில் நடந்து வருகிறது. அடுத்தாண்டு டி20 உலக கோப்பை போட்டியை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இதிலும் ஒரு போட்டி கூட, பெங்களூரில் நடக்கவில்லை.

ஏப்ரல் மாத இறுதியில் துவங்க உள்ள 'ஐ.பி.எல்., டி20' போட்டியும் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஐ.பி.எல்., போட்டி துவங்குவதற்கு முன், சட்டப்படி அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

தற்போதுள்ள பிரச்னைகளை சரி செய்து, மாநில அரசு மற்றும் பி.சி.சி.ஐ., நிர்வாகிகளுடன் ஒன்றிணைந்து, உள்நாட்டு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பெங்களூரில் நடத்த வேண்டிய பொறுப்பு வெங்கடேஷ் பிரசாத் தலைமையிலான குழுவிடம் உள்ளது.

அரசிடம் கோரிக்கை பெலகாவியில் உள்ள கே.எஸ்.சி.ஏ., மைதானத்தை, நேற்று முன்தினம் வெங்கடேஷ் பிரசாத் சுற்றிப்பார்த்தார். பின் அவர் அளித்த பேட்டி:

கூட்டத்தொடருக்கு வந்துள்ள முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்து, 'பெங்களூரில் நடந்த சம்பவத்தில் சங்கத்தின் மீது எந்த தவறும் இல்லை. அது ரசிகர்களின் கொண்டாட்டத்தின் போது நடந்த சம்பவம்.

எனவே, சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று கோரி உள்ளோம். அவர்களும் சட்டசபையிலும், அமைச்சரவையிலும் விவாதித்து முடிவெடுப்பதாக உறுதி அளித்து உள்ளனர்.

சங்கத்திற்கு மாற்றம் தேவைப்பட்டது; அது நடந்துவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று நான்கு நாட்களில் எங்களின் பணியை துவக்கி விட்டோம்.

பெலகாவி மைதானத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை வழங்க நடவடிக்கை எடுப்போம். கிரிக்கெட் வளர்ச்சிக்கு பல முன்னோக்கிய சிந்தனைகள் உள்ளன. நாங்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக வந்துள்ளோம்; அரசியலுக்காக அல்ல.

பெலகாவியில் உள்ள கர்நாடக கிரிக்கெட் சங்க மைதானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த போட்டியும் நடத்தப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்த பின், போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us