ADDED : ஏப் 25, 2025 05:54 AM

டோக்கியோவில் 2020ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சார்பில், தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் தான் நீரஜ் சோப்ரா.
உலக தரம்
இவர் நீண்ட நாட்களாக, நம் நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ஈட்டி எறிதல் போட்டியை நடத்த திட்டமிட்டு இருந்தார். இதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தார்.
இதன் மூலம் ஈட்டி எறிதல் போட்டியை, அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல திட்டமிட்டார். இதற்காக, இந்திய தடகள கூட்டமைப்பு மற்றும் உலக தடகள சம்மேளனம் ஆகியவற்றுடன் பேச்சு நடத்தினார்.
இது சமுகமாக முடிந்த நிலையில், ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்போர்ட்ஸ் உடன் இணைந்து, அவரது சொந்த மாநிலமான ஹரியானாவில் பஞ்ச்குலாவில் நடத்த ஏற்பாடுகளை செய்தார்.
வீரர்கள் மகிழ்ச்சி
இந்த போட்டிக்கு 'நீரஜ் சோப்ரா கிளாசிக்' என பெயரிடப்பட்டது. சுருக்கமாக என்.சி., கிளாசிக் என அழைக்கப்படுகிறது. பஞ்ச்குலாவில் உள்ள மைதானத்தில் உள்ள மின் விளக்குகளின் வெளிச்சம், உலக தடகள சம்மேளனம் நிர்ணயித்துள்ள அளவுகோல் படி இல்லாததால், அங்கு போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், மே மாதம் 24ம் தேதி, பெங்களூரில் உள்ள கன்டீரவா மைதானத்தில் நடக்க உள்ளது. இது பெங்களூரு தடகள விளையாட்டு வீரர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இப்போட்டியில், இருமுறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற ஆன்டர்சன் பீட்டர்ஸ், ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற ஜெர்மனி வீரர் தோமஸ் ரோலர், அமெரிக்க வீரர் கர்டிஸ் தாம்சன், பிரேசில் வீரர் லுாயிஸ் டா சில்வா, கென்ய வீரர் ஜூலியஸ் யெகோ உட்பட பல முன்னணி ஈட்டி எறிதல் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீமிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் அவர் போட்டியில் பங்கேற்பது சந்தேகமே. இப்போட்டியை உலக தடகள அமைப்பு அங்கீகரித்து உள்ளது என்பது மற்றொரு சிறப்பு. இது ஒரு நாள் போட்டியாக நடக்கிறது.
இது குறித்து நீரஜ் சோப்ரா கூறியதவாது:
இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். ஒலிம்பிக் பதக்கம் உட்பட பல பதக்கங்களை நாட்டிற்காக வென்று உள்ளேன். இப்போட்டியின் மூலம் நம் நாட்டில் உள்ள தடகள வீரர்கள், ரசிகர்களுக்கு ஏதாவது செய்ய நினைக்கிறேன். உலகத்தரம் வாய்ந்த தடகள போட்டி நம் நாட்டில் நடக்க உள்ளது. அதுவும், என் பெயரை கொண்டு நடக்க இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. வரும் நாட்களில் நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப், ஓட்டப்பந்தயம் ஆகியவை இணைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

