/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
விடாமுயற்சியில் விஸ்வரூபம் எடுத்த பூக்கள் விற்பனை
/
விடாமுயற்சியில் விஸ்வரூபம் எடுத்த பூக்கள் விற்பனை
விடாமுயற்சியில் விஸ்வரூபம் எடுத்த பூக்கள் விற்பனை
விடாமுயற்சியில் விஸ்வரூபம் எடுத்த பூக்கள் விற்பனை
UPDATED : மார் 03, 2025 10:34 AM
ADDED : மார் 02, 2025 06:22 AM

தங்கவயலில் 1955 ல் ரோஜா, மல்லி, முல்லை, கனகாம்பரம், சாமந்தி என பூக்களை குடியிருப்பு பகுதியில் கூவி கூவி விற்பனையை துவங்கி காலுான்றியவர் ராமதாஸ் -- ராணியம்மா தம்பதி. இவர்களின் விடா முயற்சி விஸ்வரூபம் எடுத்தது.
ஆரம்பத்தில், உள்ளூர் தோட்டங்களில் பூக்களை வாங்கி, தங்கள் வீட்டில் இரவெல்லாம் தொடுத்து, அதிகாலையில் தெருவெங்கும் பூக்களை விற்று, வாழ்க்கையை நடத்தினர்.
ராபர்ட்சன்பேட்டை மார்க்கெட் பகுதியில் கடை ஒன்றை எடுத்து, தங்கள் பிள்ளைகளை அதே தொழிலில் ஈடுபட வைத்தனர். இவர்களின் மறைவுக்கு பின், இவர்களின் மகன் ஆர்.ரவி, பெற்றோர் பாதையில், பூ வியாபாரத்தில் கால் பதித்தார்.
அதிக லாபம்
உள்ளூர் தோட்டங்களில் பூக்களை வாங்குவதை விட, பிற மாநிலங்களில் இருந்து வாங்கினால், குறைந்த விலைக்கு கிடைப்பதை அறிந்தார். இதனால், அங்கு வாங்கி கூடுதலாக லாபத்தை சம்பாதித்தார்.
இதனால் தமிழகத்தின் திருவண்ணாமலை சேலம், தர்மபுரி, ஆந்திர மாநிலம் குப்பம், வி.கோட்டா ஆகிய இடங்களின் விவசாயிகளிடம் நேரடியாக பூக்களை கொள்முதல் செய்ய துவங்கினர்.
ரோஜாக்களில் கருஞ்சிவப்பு, இளஞ் சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பத்துக்கும் மேற்பட்ட வண்ணங்களிலும்; செண்டு மல்லி, சாமந்தி வகை வகையான வண்ணங்களிலும்; மல்லியில் ஆம்பூர் மல்லி, குண்டு மல்லி, காக்கடா மல்லி, அடுக்கு மல்லி எனவும்; தாமரையில் பலவகையும்; கனகாம்பரம், பன்னீர் இலை ஆகியவைகளை பஸ்கள் அல்லது கார், டெம்போக்கள் மூலம் வரவழைக்கின்றனர்.
பூக்கடையில் மலர் மாலைகள் விற்பனை செய்ய ஆரம்பித்த பின், அதற்கு மவுசு கூடியது.
ரூ.50 முதல் ரூ.30,000 வரை
தங்கவயல் எம்.ஜி.மார்க்கெட்டில் பூக்கடை உரிமையாளரான ஆர்.ரவி கூறியதாவது:
தங்கவயலில் கட்டப்படும் பூ மாலைகள் மிக நேர்த்தியாக இருப்பதால், வெளி மாநிலத்தவர்களும் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். மாலைகள் விலை 50 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை மாலைகள் செய்து தருகின்றோம்.
தாமரை, ரோஜா, அல்லி, முல்லை, மல்லிகை மாலைகள், தண்டமாலை, முகூர்த்தம் மாலை, கோவில்களில் பூக்கள் அலங்காரம் என அனைத்து ஆர்டர்களையும் செய்து தருகின்றோம். இத்தொழிலில் எங்களுடன் 80 குடும்பங்கள் வாழ்கின்றன.
மொத்த வியாபாரமாகவும் பூக்களை கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றோம். எங்களிடம் வாங்கி, பலர் பூக்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
வி.ஐ.பி.,க்கள்
எங்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த சம்பவமாக, தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு அணிவிக்க ஆளுயர மாலைகள் செய்து கொடுத்தோம். பிரமிப்பை ஏற்படுத்தியதாக, என்னை தட்டிக்கொடுத்தனர். அதை மறக்கவே முடியாது.
அதே போல, கர்நாடக முன்னாள் முதல்வர்கள் குண்டுராவ், தேவகவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா, குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு அணிவிக்க பிரமாண்ட மலர் மாலைகளை செய்து கொடுத்துள்ளோம். இந்நிகழ்வுகளை எங்களால் மறக்க முடியாது.
நாங்கள் உருவாக்குகிற மாலைகளின் வடிவம் மைசூரில் காணலாம். தங்கவயல் மாலைகள் புதுமாதிரியானவை.
பண்டிகை காலங்களில் பூக்கள் விலை அதிகமாக இருக்கும். கூடுதலாக விற்பனை செய்வதாக பூக்காரர்களை தவறாக கருதுவது வழக்கம்.
பூ உற்பத்தி செய்யும் விவசாயிகளே அத்தகைய சந்தர்ப்பங்களில் விலையை உயர்த்தி விடுகின்றனர். தேவையை கருதி, எவ்வளவு விலையாக இருந்தாலும் வாங்கி விற்க வேண்டும். எனவே வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்க வேண்டியது தொழில் தர்மம் ஆகிவிட்டது. இவரது தொடர்புக்கு மொபைல் எண்: 94485 52145.
இவரது மகன்கள் அருண், திலீப் ஆகிய இருவரும் தாத்தா, பாட்டி, தந்தை வழியில் சொந்த காலில் நிற்கின்றனர். சுயதொழிலாக, பூக்களே எங்களை வாழ்வளிக்கும் மூலதனம் என்கின்றனர்