ADDED : செப் 19, 2026 11:28 PM

- நமது நிருபர் -
அன்றைய மன்னராட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட புராதன ஏரிகள், குளங்கள் காலப்போக்கில் காணாமல் போகின்றன. இது போல் கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருந்த ராணி அப்பக்கா காலத்தின் இரண்டு குளங்கள், சமூக ஆர்வலர்களின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றுள்ளன.
தட்சிண கன்னடா மாவட்டம், உல்லாளில், சில ஆண்டுகளாக மேலங்கடி கிராமத்தில் தொடர்ந்து பல பிரச்னைகள் ஏற்பட்டன. இதற்கு என்ன காரணம் என, தெரிந்து கொள்வதற்காக, கேரள ஜோதிடர்களை வரவழைத்து பிரசன்னம் பார்க்கப்பட்டது. இறைவன் பெயரில் அவர்கள் ஜோதிடம் பார்த்த போது, ராணி அப்பக்கா ஆட்சியில், அவரது வெற்றிக்கும், உல்லாளின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்த தீர்த்த குளங்களை அலட்சியப்படுத்தியதும், பூஜைகள் நின்றதும், பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் என்பது தெரிந்தது.
அதன் பின் ஜோதிடர் கூறிய, 23 இடங்களில் தேடிய போது, புராதன வீடு ஒன்றில், ஈசானிய திசையில் குளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. செடி, கொடிகள் வளர்ந்து, புதர் மண்டி மூடி கிடந்ததால், குளங்கள் இருப்பதே யாருக்கும் தெரியவில்லை.
இதையடுத்து தன்னார்வலர்கள், பக்தர்கள் இணைந்து குளங்களை சீரமைக்க துவங்கினர்.
இவை பூஜிக்கப்பட்ட தீர்த்த குளங்கள் என்பதால், சீரமைப்பு பணிக்கு ஜே.சி.பி., இயந்திரங்கள் பயன்படுத்தவில்லை. பம்ப் மூலமாக கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. மக்களே சேர்ந்து குளங்களை சீரமைத்தனர். படிகளை கழுவி சுத்தப்படுத்தினர்.
இந்த குளங்களுக்கு, மிக சிறப்பான வரலாற்று பின்னணி உள்ளது. தீர்த்த யாத்திரை செல்லும் பக்தர்கள், இந்த குளங்களில் நீராடினர்.
குளங்களை நிர்வகிக்கவும், ஆன்மிக சேவைகளுக்கும் மன்னர்கள், தாராளமாக நன்கொடை வழங்கினராம். தற்போது ஒரு குளத்தின் பணி, முழுமையாக சீரமைப்பு பணி முடிந்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குளங்களுக்கு, எந்த தோஷங்களும் ஏற்படாமல், ஆகஸ்ட் 16ம் தேதியன்று கோபூஜை செய்தனர்.
தற்போது இரண்டாவது குளத்தை, சீரமைக்கும் பணியை தன்னார்வ சேவகர்கள் துவக்கியுள்ளனர். இவர்களின் முயற்சியால், புராதன குளங்கள் புதுப்பொலிவு பெறுகின்றன.
ராணி அப்பக்கா செயற்குழு உறுப்பினர் லதா ராய் கூறியதாவது:
போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக வீரத்துடன் போராடிய வீரமங்கை ராணி அப்பக்கா. இவர், இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடிய, முதல் வீர ராணி. அவரது ஆட்சியில் இருந்த உல்லாளில், தீர்த்த குளங்களுக்கு, புத்துயிர் அளிக்கிறோம். ஏற்கனவே ஒரு குளத்தை சீரமைக்கும் பணி முடிந்துள்ளது. மற்றொரு குளத்தை சீரமைக்கும் பணியை துவக்கியுள்ளோம்.
நமது முன்னோர் அமைத்த ஏரி. குளங்களை பாதுகாக்க வேண்டும். கேரள ஜோதிடர்கள் பிரசன்னம் பார்த்து கூறியதால், குளங்களை பற்றி தெரிந்தது. ஹிந்து அமைப்பினர் சேர்ந்து, குளங்களை சீரமைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
