மலையேற்றம் கற்றுக்கொடுத்த பாடம் இளைஞர்களுக்கு வழிகாட்டும் மாணவர்
மலையேற்றம் கற்றுக்கொடுத்த பாடம் இளைஞர்களுக்கு வழிகாட்டும் மாணவர்
ADDED : மார் 01, 2026 04:58 AM

- நமது நிருபர் -
மலையேற்றம் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு இருந்தாலும், அதற்கு சரியான பயிற்சி வேண்டும். மலையேற்ற சாகசம் செய்வது எளிதான விஷயமல்ல. கதக்கில் ஒரு இளைஞர், மலையேற்றத்தில் பல சாதனைகள் செய்துள்ளார். தன்னை போலவே மற்றவர்களும் சாதனை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.
கதக் நகரில் வசிப்பவர் ஹனுமந்தராவ், 20; பி.பி.ஏ., பட்டம் பெற்றவர். இவருக்கு சிறு வயதில் இருந்தே, மலையேற்றத்தில் ஆர்வம் உண்டு. 2023ல் உத்தரகண்டின் நேரு இன்ஸ்டிடியூட்டில் மலையேற்றம் குறித்த பயிற்சி பெற்றார். மூன்று ஆண்டுகளில், நான்கு முறை இமயமலைக்கு சென்றுள்ளார்.
நுட்பங்கள் கிராமப்புற இளைஞர்களை, மலையேற்றத்துக்கு ஊக்குவிக்கும் நோக்கில், இலவசமாக பயிற்சி அளிக்கிறார். பயிற்சி பெறுவோரை, பாதாமி, சித்ரதுர்கா, ஷிவமொக்கா உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறார்.
வானிலை, மலையின் சூழ்நிலையை புரிந்து கொள்வது, மலையேறும் நுட்பங்கள், கோட்பாடுகளை பற்றி பயிற்சி தருகிறார்.
கதக் மாவட்ட கிராமப்புறங்களில், 50க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு ஹனுமந்தராவ் பயிற்சி அளித்துள்ளார். முதற்கட்டமாக கதக் மற்றும் முன்டரகி தாலுகாக்களில் இருந்து, இளைஞர்களை தேர்வு செய்துள்ளார்.
இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், இத்தகைய சேவை செய்து வருகிறார்.
ஹனுமந்தராவ் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை கிரிஷ் குல்கர்னி, கதக் நகராட்சி அலுவலகம் அருகே, ஜெராக்ஸ் கடை நடத்துகிறார். ஹனுமந்தராவ் முதன் முதலில் மலையேறும் ஆசையை வெளிப்படுத்திய போது, தந்தை தயங்கினார். பின், சம்மதம் தெரிவித்தார். சவாலான சூழ்நிலைக்கு தயாராகும்படி மகனுக்கு அறிவுறுத்தினார்.
ஐஸ் கிராப்ட் தந்தையின் வழிகாட்டுதலுடன், ஹனுமந்தராவ் மலையேற்ற பயிற்சிக்காக, உத்தரகண்ட் சென்றார். அங்கு பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாட்டினரை சந்தித்தார்.
இவர் மலையேற்றம் குறித்து மட்டுமின்றி, மலைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் பயிற்சி பெற்றுள்ளார். ஐஸ் கிராப்டில் சிக்குவோரை மீட்கும் குழுவில், இவரும் ஒரு அங்கமாக இருக்கிறார்.
தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அவர்களை இமயமலைக்கு அழைத்து செல்ல ஹனுமந்தராவ் தயாராகி வருகிறார். தட்பவெட்ப மாற்றத்தை சமாளிக்கும் உடற்திறன் கொண்டவர்களை தேர்வு செய்கிறார்.
மலையேற்றம் மிகவும் கடுமையானது. இதற்கு பொறுமை, ஆர்வம் மிகவும் அவசியம். இம்முறை ரோணா, கஜேந்திரகடா, முன்டரகி, ஷிரஹட்டி தாலுகாக்களில் இருந்து, இளைஞர்களை தேர்வு செய்ய ஹனுமந்தராவ் திட்டமிட்டுள்ளார்.
ஹனுமந்தராவ் கூறியதாவது:
கஷ்டங்கள் வரும் போது, எப்போதும் பயந்து ஓடக்கூடாது என்பதை, மலையேற்றம் எனக்கு கற்றுக்கொடுத்தது. மலை, காற்று, மவுன சூழ்நிலை என, அனைத்தும் எனக்கு பல பாடங்களை கற்பித்தன.
நான் என்.சி.சி.,யில் இருந்த போது, உத்தரகண்டிற்கு சென்ற போது, மலையேற்றம் கற்றேன். என்னை போன்ற கிராமங்களின் இளைஞர்களும் மலையேற்றம் செய்ய வேண்டும் என, விரும்புகிறேன்.
கடந்த, 2024ல், இலவச பயிற்சி முகாம் துவக்கினேன். என் மனநிலைக்கு பொருந்திய இளைஞர்களை ஒன்று சேர்த்து, கர்நாடகாவுக்குள் மலையேற்றம் அழைத்து செல்கிறேன். மீட்புக்குழுவில் நானும் இருப்பதை பெருமையாக உணர்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
