தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ ரூ.30ல் அசுத்த நீரை குடிநீராக்கும் கருவியை கண்டுபிடித்த வாலிபர்

 ரூ.30ல் அசுத்த நீரை குடிநீராக்கும் கருவியை கண்டுபிடித்த வாலிபர்

 ரூ.30ல் அசுத்த நீரை குடிநீராக்கும் கருவியை கண்டுபிடித்த வாலிபர்


ADDED : பிப் 01, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு லிட்டர் சுத்தமான குடிநீர் பெற, இரண்டு லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், பெலகாவியை சேர்ந்த வாலிபர், 30 ரூபாயில் அசுத்த நீரை குடிநீராக்கும் பில்டர் கருவியை கண்டுபிடித்து சாதித்துள்ளார்.

பெலகாவியை சேர்ந்தவர் நிரஞ்சன், 30. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது, தன் வீட்டருகே உள்ள அரசு பள்ளிக்கு, அவரும், அவரது நண்பர்களும் அடிக்கடி விளையாட செல்வர். ஒரு நாள் மாணவர்கள், குடிநீர் டேங்கில் இருந்து தண்ணீர் குடித்து கொண்டிருந்தனர்.

அவர்கள் குடிக்கும் நீர் எப்படி உள்ளது என்பதை பார்க்க டேங்கை திறந்து பார்த்த போது, அதிர்ச்சி அடைந்தார். டேங்க் முழுதும் பாசி படிந்திருந்தது. இது, அவரின் மனதை மிகவும் வாட்டியது.

பல நாட்கள் தொடர் முயற்சியால், அசுத்தமான நீரை நல்ல குடிநீராக்கும் கருவியை கண்டுபிடித்தார். இவர், இதை மட்டுமல்ல, படிக்கும் காலத்திலேயே வேறு பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து உள்ளார். அதற்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து நிரஞ்சன் கூறியதாவது:

பள்ளி மாணவர்கள் அசுத்தமான நீரை குடிப்பது வேதனை அளித்தது. அதற்கான வடிகட்டிகளை வாங்கலாம் என்றால், விலை உயர்ந்தவையாக இருந்தன. நானோ நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். இவ்வளவு தொகை கொடுத்து, நீர் சுத்திகரிப்பு கருவியை நன்கொடையாக வழங்க இயலாது.

அப்போது தான், அனைவரும் தங்கள் கையில் எடுத்து செல்லும் வகையிலான வடிகட்டிகளை (பில்டர்கள்) ஏன் உருவாக்கக் கூடாது என்ற யோசனை தோன்றியது.

அதற்கான முயற்சியில் இறங்கினேன். என் கல்லுாரி படிப்பை முடிக்கும் முன்னரே, கருவியை கண்டுபிடித்து விட்டேன். அதற்கு, 'நிர்நல்' என்று பெயர் சூட்டினேன்.

கடைகளில் விற்கப்படும் வடிகட்டிகள், அந்நிறுவனங்களுக்கு ஏற்றபடியாக தயாரித்திருப்பர்.

ஆனால், நான் தயாரித்துள்ள இந்த வடிகட்டி, எந்தவிதமான பாட்டில், குடிநீர் குழாய்களிலும் பொருத்தி தண்ணீரை குடிக்கலாம். நான் தயாரித்துள்ள வடிகட்டி, 100 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும். பாக்கெட் வடிகட்டிகளை, 30 ரூபாய்க்கு விற்கிறோம்.

எனது கண்டுபிடிப்புக்கு ஆரம்பத்தில் தேஷ்பாண்டே அறக்கட்டளை நிதியுதவி வழங்கியது.

பின், ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் கர்நாடகா, மஹாராஷ்டிரா அரசுகளிடம் இருந்து ஆதரவு கிடைத்தது.

சி.ஆர்.பி.எப்., கமாண்டோக்கள், இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் கப்பல் படைக்கும், எனது தயாரிப்பு பில்டர்களை வினியோகிக்கிறோம். இதுவரை, 2 லட்சம் யூனிட்களுக்கு மேல் விற்பனை செய்து உள்ளோம். ஆப்ரிக்கா, கத்தார், சிங்கப்பூர், மலேசியா போன்ற, 15 வெவ்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம்.

தற்போது கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இத்திட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவர் தனது கண்டுபிடிப்புகளுக்காக 2022ல், 'இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ்' விருது உட்பட 17 விருதுகள் பெற்றுள்ளார். மேலும் விபரங்களுக்கு 88846 60444, 88846 09444 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

- நமது நிருபர் -:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us