குழந்தைகள் மீது தாய் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் கண்காட்சி
குழந்தைகள் மீது தாய் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் கண்காட்சி
ADDED : ஆக 22, 2026 11:18 PM
-- நமது நிருபர் --
பெங்களூரில் உள்ள இத்தாலிய தலைமை துாதரகம், மத்திய அரசின் கலாசாரத்துறை இணைந்து, பெங்களூரு வசந்த நகரில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் ஒரு தாய், பல தாய்மொழிகள் என்ற கருத்தை மையமாக வைத்து, கண்காட்சி நடத்தப்படுகிறது.
கடந்த, 20ம் தேதி துவங்கிய கண்காட்சி, அடுத்த மாதம் இருபதாம் தேதி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம் என்னவென்றால், 'நாடுகள் வெவ்வேறாக இருந்தாலும், தாய் தன் குழந்தை மீது காட்டும் அன்பு ஒன்று தான்' என்பதை வெளிப்படுத்துகிறது.
இந்த கண்காட்சியில், இத்தாலி மற்றும் இந்தியக் கலைப் படைப்புகள், அரிதான சிற்பங்கள் மற்றும் சாண்ட்ரோ போட்டிசெல்லியின் புகழ்பெற்ற, 'மடோனா அண்ட் சைல்டு' ஓவியம் போன்றவற்றை, நேரில் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
அரங்கில், தாய் தன் குழந்தையின் அன்பை வெளிப்படுத்தும் வகையிலான 26 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தின் பல்லவர் காலத்து சிற்பமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.
'மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் குழந்தை என்று வந்து விட்டால், அனைத்து தாய்களும் ஒரே மாதிரியாக தான் இருப்பர்' என்பதை, இந்த சிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
ஒவ்வொரு சிலைகளும் கிரானைட், சிவப்பு பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட, 4,000 ஆண்டுகள் பழமையான சிலை இங்கு வைக்கப்பட்டுள்ளது. சில சிலைகளை டில்லியில் உள்ள மத்திய அரசின் அருங்காட்சியகத்திலிருந்து இங்கு எடுத்து வந்து வைத்துள்ளனர்.
இங்குள்ள அனைத்து சிலைகளும் பார்வையாளர்களை, குறிப்பாக, தாய்மார்களை கவரும் வகையில் உள்ளது. திங்கள், அரசு விடுமுறை நாட்களில் கண்காட்சிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை, தினமும் காலை 10:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை கண்காட்சியை பார்க்கலாம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 11:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை பார்க்கலாம்.
அவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ௨௦ ரூபாய் கட்டணம்.
